அன்புக்கு அவள் அடிமை!
நாயகத்தின் நண்பரான கலீபா உமரிடம், தனது குடும்பச் சண்டைக்கு தீர்வு பெற வந்தார் ஒருவர். அப்போது, சண்டை போட்டுக் கொண்டிருந்தார் உமர். இதைப் பார்த்து வருத்தத்துடன் நின்று விட்டார் வந்தவர். இதை கவனித்த உமர், வந்தவரிடம் விஷயத்தைக் கேட்டார். அவர் குடும்பச்சண்டை பற்றி சொல்லிய பின், உமர் சொன்னார், “என் மனைவி, எனது ஆடைகளைத் துவைக்கும் வேலைக் காரியாக இருக்கிறாள். பிள்ளைகளை கவனிக்கும் தாயாக இருக்கிறாள். என் உடமைகளை பாதுகாப்பவளாக இருக்கிறாள். என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றுபவராக இருக்கிறாள். எனக்கு இவ்வளவும் இருப்பதால், அவள் கோபப்படும் போது நான் பொறுமையாக இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அம்மனிதர், “நீங்கள் சொல்வது உண்மை தான்.. இவ்வளவு நாள், என் மனைவியுடைய கஷ்டங்களை புரிந்து கொள்ளவேயில்லை. இப்போது உண்மை புரிந்ததால் அவள் மீது எழுந்த கோபம் காணாமல் போனது” என்று சொல்லி நிம்மதியுடன் புறப்பட்டார்.
நபிகள் நாயகத்திடம் வந்த ஒருவர் வருத்தத்துடன் சொன்னார், “அண்ணலாரே! எனது மனைவி தேவையில்லாததை பேசி பக்கத்து வீட்டாருடன் அடிக்கடி சண்டையிடுகிறாள். இதனால் அக்கம் பக்கத்தில் எனக்கு மரியாதை இல்லை. அந்த கோபத்தில் என் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தும் நிலைக்கு ஆளாகி விட்டேன்”இதைக் கேட்டு சற்று யோசித்த நாயகம், அவரை சோதிக்க எண்ணி, “அப்படியானால் உமது மனைவியிடம் தலாக் சொல்லி விடு,” என்றார். உடனே அவர்,“ஐயோ! அது என்னால் முடியாது. அவள், எனக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறாள். இன்னும் எவ்வளவோ நன்மைகள் செய்கிறாள். அவளை எப்படி நான் தலாக் சொல்ல முடியும்...” என்று கூறியதும், “அப்படியானால், அவளுக்கு நல்ல புத்திமதிகளை சொல். அதை விட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.” என்று சொல்லி அனுப்பினார் நாயகம்.