மாகாளியம்மன் கோவிலில்மகா கும்பாபிஷேக விழா
திருப்பூர்:பெருமாநல்லுார் அருகே ஈட்டிவீரம்பாளையம் கிராமம், முட்டியங்கிணறு விநாயகர், மாகாளியம்மன், மந்தகருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த நான்கு நாட்களாக, கோவில் யாகசாலையில், நான்கு கால யாக பூஜைகள் நடந்து வந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை, வேள்வி பூஜைகள், பூர்ணாகுதி வழிபாடுகளை தொடர்ந்து, தீர்த்த கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டன. மங்கல வாத்தியம் முழங்க, சிவாச்சார்யார்கள் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்களை ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். அதன்பின், விமானம் மற்றும் மூலவர் விக்ரஹங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் செய்தனர். மேலும், காலை, 9:45 மணிக்கு, விநாயகர், மாகாளியம்மன், மந்த கருப்பராயன் சுவாமிகளுக்கும், விமானங்களுக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு, அன்னதானமும் வழங்கப்பட்டது.