13 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த மாரியம்மன் கோயில் திறப்பு!
கொட்டாம்பட்டி :கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீயந்தான்பட்டி. இங்குள்ள மாரியம்மன் கோயில், ஒரு சமூகத்தினரால் பரம்பரையாக வழிபடப்பட்டு வந்தது. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் அச்சமூகத்தில் நடந்த ஒரு காதல் திருமணத்தால், அச்சமூகத்தினர் இருதரப்பாக பிரிந்ததில் ஒரு தரப்பினர், கோயில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றுகூறி கோயிலைப் பூட்டினர். ஆறு ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம், கிராம மக்கள் அனைவருக்கும் கோயில் பொது என்றும், யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்றும், உடனடியாக கோயிலைத் திறக்கவேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதனையடுத்து, நேற்று டி.எஸ்.பி., மணிரத்னம், இன்ஸ்பெக்டர் மாடசாமி, துணை தாசில்தார் மாரியப்பன், ஆர்.ஐ., சந்திரன் ஆகியோர் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே பூஜாரியாக இருந்த பெரியதம்பி இறந்துவிட்டதால், அவரது வாரிசுகளுள் ஒருவர் தொடர்ந்து பூஜாரியாக இருக்க இருதரப்பினரும் ஒத்துக் கொண்டனர். அதன்பிறகு கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றனர்.