லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை
புதுச்சேரி: லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கான சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. 16வது ஆண்டாக இந்தாண்டும் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக பொதுத்தேர்வு நாட்களில் இந்த சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில், மாணவர்கள் தங்களின் தேர்வு ஹால்டிக்கெட்டுகள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றனர். தினந்தோறும் மாலையில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்கிரீவர் பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.