சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்
சிதம்பரம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவை, என்.எல்.சி., தலைவர் ராகேஷ் குமார் துவக்கி வைத்தார்.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் பண்பாட்டு துறை, டில்லி சங்கீத நாடக அகாடமி, தென்னிந்திய கலாசார மையம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து, 38ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவை நடத்தின. தெற்கு வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வளாகத்தில் நேற்று மாலை மங்கள இசையுடன் துங்கியது. துவக்க விழாவிற்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்மந்தம் வரவேற்றார். நெய்வேலி என்.எல்.சி., சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராகேஷ் குமார் துவக்கி வைத்தார். பின்னர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், என்.எல்.சி., அதிபர் ரகேஷ் குமார், மனைவி காஞ்சன் கம்புராவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக, பெங்களூரூ ஸ்கந்த நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின், அமெரிக்கா சித்தேந்திரா குச்சுப்புடி கலை மையம், மலேசியா நிருத்ய கலாஞ்சலி நாட்டிய மையம், நர்த்தன நாட்டிய பள்ளி, பெங்களூரு நுாபூர் கலை மையம், நிருத்திய பிரகாஷ் வர்ஷினி, இந்தோனேசியா சிந்து நாட்டிய பள்ளி, தானே தக்ஷலீலா நிருத்ய கலா மந்தீர் ஆகிய மாணவிகளின் பரதம், குச்சிப்புடி, கதக், ஒடிசி போன்ற பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர் நடராஜன், சுவாமிநாதன், தொழிலதிபர் ராமநாதன், டாக்டர் நாகசுவாமி, டாக்டர் கணபதி, சபாநாயகம், பழனி, ராமலிங்கம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தர்பாரண்யன், ராதா முத்துக்குமார், ஜோதிமணி பழனி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.