புராணத்தில் சிவராத்திரி!
ADDED :2448 days ago
சிவபெருமானை வழிபடுவதற்குரிய புண்ணியகாலம் சிவராத்திரி. இது குறித்த காரணங்கள் பலவிதமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடியையும் முடியையும் தேடிய இரவு சிவராத்திரி. அப்போது சிவன் லிங்கோத்பவர் என்னும் பெயரில் எழுந்தருள தேவர்கள் ஒன்று கூடி சிவனை வழிபட்டனர்.
உலக உயிர்களின் நன்மைக்காக பார்வதி கண்விழித்து இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட நாள். ஒருசமயம் பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை கைகளால் மூட உலகமே இருண்டு போனது. அப்போது கோபப்பட்ட சிவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் அவரை பூஜித்த இரவே சிவராத்திரி. தேவர்களைக் காப்பதற்காக பாற்கடலில் எழுந்த விஷத்தை ஒன்று திரட்டி சிவன் குடித்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க அன்று இரவில் தேவர்கள் அனைவரும் கண்விழித்து வழிபட்டனர்.