நம்பினால் நல்லது நடக்கும்
கடவுளுக்கு பிரியமானவராக யோபு என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு ஏழு மகன், மூன்று மகள் உண்டு. அவரைக் கண்டு பொறாமைப்பட்ட சாத்தான், ஒருமுறையாவது கடவுளை வெறுத்துப் பேச வைக்க வேண்டும் என திட்டமிட்டது சாத்தான். “யோபுவைச் சோதிக்க அனுமதி தர வேண்டும்” என கடவுளிடம் கேட்டது சாத்தான். “யோபுவுக்கு தனிப்பட்ட வகையில் துன்பம் தராமல், அவனது உடமைகளை மட்டும் அழித்து விடு” என்றார் கடவுள். ஆடு, மாடு, ஒட்டகம், பயிர்களை மட்டும் அழித்தது சாத்தான். வேலையாட்களும் கொல்லப்பட்டனர். வீடு இடிந்து பத்து குழந்தைகளும் இறந்தனர். இந்நிலையில் நம்மைப் போன்றவர்கள்,”கடவுளே... உமக்கு என்ன குறை வைத்தேன். காணிக்கை கொடுத்தேன். உம்மை வழிபட்டேன். இப்படி செய்து விட்டீரே! உமக்கு கண் இல்லையா” எனத் திட்டுவோம். யோபுவோ,“கடவுள் கொடுத்தார்; அவரே எடுத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்” என்றார்.
இதன் பின்னும் சாத்தான் விடவில்லை. மேலும் யோபுவுக்கு துன்பத்தை ஏற்படுத்த அனுமதி பெற்றது. ’உயிரை மட்டும் எடுக்காதே’ என்ற நிபந்தனை விதித்தார் கடவுள். யோபுவின் உடலில் கட்டிகள் தோன்றின. வேதனை தாங்க முடியவில்லை. யோபுவின் நண்பர்கள்,“நீ கடவுளுக்கு எதிராக பாவம் செய்திருக்கிறாய்; அதனால் தான் உனக்கு இந்த நிலை வந்தது” என்றனர். “எந்த சூழ்நிலையிலும் கடவுள் செய்வதே சரியானது’ என்பதில் தெளிவாக இருந்தார் யோபு. சோதனைகளைப் பொறுத்துக் கொண்ட அவரைக் கடவுள் ஆசிர்வதித்தார். இதன் பின்னர் ஏழு மகன்கள், மூன்று மகள்கள் அவருக்குப் பிறந்தன. 140 ஆண்டுகள் வரை வாழ்ந்த அவர், நான்கு தலைமுறை பேரப்பிள்ளைகளைக் கண்டு மகிழ்ந்தார். சோதனை குறுக்கிட்ட காலத்திலும் நம்பிக்கை இழக்காதவர்களை கடவுள் கை விடுவதில்லை.