உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாத ஜாடி திருமஞ்சனம்!

திருப்பாத ஜாடி திருமஞ்சனம்!

நாகை மாவட்டம், பொறையாரில் உள்ள கோதண்டராமர் கோயிலில் மாசி மக நாளில் தீர்த்தவாரி வெகு பிரபலம். அன்று பொறையார்  கோதண்டராமர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் பெருமாள் ஆகியோருக்கு கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி பெருவிழாவை தரிசித்தால் சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. சொத்துப் பிரச்னைகளால் அவதிப்படுவோர், தேர்வு எழுதும் மாணவர்கள், தம்பதி ஒற்றுமை மேலோங்க விரும்புவோர் இங்கு வந்து வழிபட நினைத்தது நிறைவேறும் என்கின்றனர்.

மாசி மாத மூல நட்சத்திரத்தன்று திருப்புட்குழி கோயிலில் மாசி உற்சவக் கொடி ஏற்றப்பட்டு மாசி மாத ரேவதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெறும். இந்த பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் குதிரை வாகன சேவையும் தொட்டித் திருமஞ்சன விழாவும் நடைபெறும். பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்து அலங்கரிப்பர். பின்பு பெரிய கங்காளத்தில் புனித நீரில் வாசனைத் திரவியங்கள் கலந்து நிரப்பி முதலில் பெருமாள் பிறகு உபய நாச்சியார்களின் திருப்பாதங்களை அர்ச்சகர்கள் நனையச் செய்வார்கள். இதற்கு திருப்பாத ஜாடி திருமஞ்சனம் என்று பெயர். அன்று மாலை குதிரை வாகன சேவை நடக்கும். திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் மாசிமகம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. ஏழு ஊர்களான லால்குடி, பூவாளூர், திருமங்கலம், சென்னிவளநாடு, கூகூர், இடையாற்றுமங்கலம், மாந்துறையிலிருந்து பெருமாள்கள் ஒன்றுகூடி கொள்ளிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு விழா நடத்தப்பட்டு மாலையில் புனித நீராட்டு விழா நடத்துகின்றனர். பிறகு ஏழு ஊர் பெருமாள்களையும் உலாவாகத் தத்தம் ஊருக்கு எடுத்துச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !