வீடு தேடிவரும் தேவி!
கேரளாவில் முட்டம் எனுமிடத்தில் மகாலட்சுமி, "மனக்காட்டுத்தேவி என்ற பெயரில் கோயில் கொண்டுள்ளாள். ஆண்டுதோறும் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் வரும் மகாபரணி நாளன்று இந்த தேவி. "ஜீவிதா எனப்படும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்களின் இல்லம் தேடி வருவாள். 12 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில் பக்தர்கள் அன்பொளி மற்றும் தாலப்பொளி (பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தாம்பாளத்தின் நடுவே தீபம்) ஏந்தி பஞ்சவாத்தியம் முழங்க அன்னையை வரவேற்று வழிபடுவார்கள்.
பொதுவாக கோயில்களில் தேர்த்திரு விழாவில் பவனிவரும் இறைவன், விழா முடிந்ததும் கோயிலின் உள்ளே சென்று விடுவார். ஆனால் திருவண்ணாமலை மாவட்டம், போத்துராஜா மங்கலம் கிராமத்தில் உள்ள போர் மன்னலிங்கேஸ்வரர், ஆண்டு முழுவதும் தேரில் அமர்ந்தே அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் முடிந்த 3-ம் நாளில் விமரிசையாக தேர்த்திருவிழா நடக்கும். கருவறையில் நிலையிலிருக்கும் தேர், அப்போது அலங்கார தோற்றத்துடன் பவனி வரும். உலா முடிந்ததும் மீண்டும் தேர் கருவறையில் நிறுத்தப்படும்.