உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிக வரம் பெறலாம்!

அதிக வரம் பெறலாம்!

பராசக்தியே உலகிற்கு ஆதாரம் என்கிறார் மகாகவி பாரதியார். அண்ட வெளியில் கோள்கள் எல்லாம் ஆதாரம் ஏதுமின்றி  சுழல்வதாக நினைக்கிறோம். ஆனால் பராசக்தி என்னும் ஆதாரத்தால் அவை தன் பணிகளைச் செய்கின்றன. அது போல நாமும் நமக்குரிய தொழிலை செவ்வனே செய்ய வேண்டும். எந்த பாகுபாடும் தொழில்களில்  கிடையாது. உலகம் இயங்க எல்லாத் தொழில்களும் மிக அவசியம். துப்புரவு பணியாளர் ஒருநாள் வராவிட்டாலும் மறுநாள் சாலையில் யாரும் நடக்க முடியாது.  ”நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதனைச் செவ்வனே செய்யுங்கள். உங்களைத் தவிர வேறு யாரும் இது போல செய்ய முடியாது என பிறர் பாராட்ட வேண்டும். எல்லாத் தொழில்களும் பராசக்தியுடையது. நாம் அதைச் செய்வதன் மூலம் அவளின் கையில் ஒரு கருவியாக இருக்கிறோம்.

பரபரப்பான இன்றைய சூழலில் “எப்படி இருக்கிறீர்கள்?” என கேட்டால் “ ஏதோ ஓடுகிறது” என்றே பதில் வருகிறது. ஆனால் சிலர்,  “பரவாயில்லை’  “யார் கிட்ட சொல்றது? “என்ன கிண்டலா?”  “என்னையப் பாத்தா எப்படி தோணுது?” என்று கோபம், கிண்டல் கலந்து பதிலளிக்கின்றனர். “ நன்றாக இருக்கிறேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்!” என்று சொல்பவர் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே. துன்பமே இயற்கை எனப் புலம்புவோர் மத்தியில் “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” எனச் சொல்லிப் பழக வேண்டும். அனைவருக்கும் நேர்மறை எண்ணம் இருந்தால் எங்கும் இன்பம் காணலாம். வாழ்வதற்கான சூழல் இல்லாத நிலையிலும்  மகாகவி பாரதியார் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா!” என பாடினார் என்றால் அவரது நம்பிக்கைக்கு அளவு உண்டா என்ன? அதற்கு என்ன வேண்டும்? நம்பிக்கை. எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கும் சூழலில் வாழும் நாம், யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படுகிறோம். பக்கத்தில் இருப்பவன் திருடனோ? என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.

முதலில் நம்மிடம் நம்பிக்கை. பிறகு கடவுளிடம் நம்பிக்கை. நம்பியவர்கள் என்றும் கெடுவதில்லை என உரக்கச் சொல்கின்றன வேதங்கள். ’எங்கும் எதிலும் எந்நாளும் இன்பமே’  என்று சொல்லி பழகுவோம். அதுவே உண்மை. அந்நிலையை அருளும் தேசமுத்து மாரியைச் சரணடைவோம். அவளிடம் அதிக வரம் பெற்று, ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகவும், வெற்றியாகவும் ஆக்குவோம்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்

யாதானுந் தொழில் புரிவோம்: யாதுமவள்   தொழிலாம்
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்: யாவுமவள் தருவாள்
நம்பினார் கெடுவதில்லை   நான்குமறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !