உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது : பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள்

அத்தி வரதரை தண்ணீருக்குள் வைக்கக்கூடாது : பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள்

திருக்கோவிலுார்: ’யாருக்கும் பயந்து சுவாமியை ஒளித்து வைக்கும் காலம் இது இல்லை என்பதால் காஞ்சி அத்திவரதரை பக்தர்கள் தினசரி சேவிக்கும்  வகையில் வெளியிலேயே வைக்க வேண்டும்’ என பரனுார் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி  சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தி வரதர், நீருக்குள்,வைக்க கூடாது

காஞ்சி அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எடுத்து  வழிபடும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. ’ஒரு காலத்தில் மன்னராட்சியில்  படையெடுப்புக்கு அஞ்சி கோவில் சிலைகளை பாதுகாக்க பக்தர்கள் கடைபிடித்த  வழிகளில் இதுவும் ஒன்று’ என ஒருசாரார் கூறுகின்றனர்.

’யாக குண்டத்தில் இருந்து எழுந்த அத்திவரதரை குளிர்விப்பதற்காக குளத்தில்  எழுந்தருளச் செய்வது வழக்கம்’ என மற்றொரு சாரார் கருத்து கூறுகின்றனர்.  இந்நிலையில் ’அத்திவர தரை மீண்டும் குளத்தில் வைக்க கூடாது’ என்ற குரல்கள் எழுந்துள்ளன. இது குறித்து விழுப் புரம் மாவட்டம் திருக்கோவிலுார் அடுத்த  பரனுார் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ’தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

பல நூற்றாறாண்டுகளாக அத்திவரதர் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளாக  மூலஸ் தானத்தில் வீற்றிருந்தார். 250 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கலக காலத்தில் அத்திவரதரை அங்கிருக்கும் திருக்குளத்தில் ஒளித்து வைத்தனர். இது  நமக்குகாஞ்சிபுரம் கோவிலில் உள்ள துஜகம்ப கல்வெட்டில் கிடைக்கிறது.

தற்போது அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.  40 ஆண்டு களாக தண்ணீருக்குள் இருந்த மூர்த்தி தாது - மரம் - எந்தவித பழுதும்  இல்லாமல் இருப்பதை தினசரி பல லட்சம் பக்தர்கள் தரிசித்து மகிழ்கின்றனர்.

பழைய வழக்கப்படி மூர்த்தியை தண்ணீருக்குள் தான் வைப்போம் என்றால்  தெய்வமாக பார்த்துக் கொண்டிருந்த இவ்வளவு மக்களின் மனசுக்கும் கஷ்டமாக  இருக்கும். மறுபடியும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய  கலகத்திற்கு பயந்து ஒளித்து வைத்தனரோ இப்போது அந்த கலகம் இல்லை.  எனவே கோவிலில் அனைவரும் சேவிக்கக்கூடிய ஒரு இடத்தில் வைத்து  விடலாம். இது என் தனிப்பட்ட கருத்து அல்ல. பக்தர்களின் எண்ணமும் இதுதான்.  இதை தேவஸ்தானம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு  அவர் கூறினார்.

பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செய்யப்பட்டு உள்ளது.சேலம் மாவட்டம் கண்ணன்குறிச்சியை சேர்ந்த  ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்  கோவிலில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான  பக்தர்கள் செல்கின்றனர்.

பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட  நிர்வாகம் முறை யாக செய்யவில்லை.இதனால் பக்தர்கள் நீண்ட நேரம்  வரிசையில் காத்திருந்து வழிபட வேண்டி உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி  இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர்  கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை.

எனவே அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை  வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர மாவட்ட கலெக்டருக்கு  உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில்  விசாரணைக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !