சதுரகிரி வரும் பக்தர்களே.. உணவு, தண்ணீருடன் வாருங்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஜூலை 27 முதல் ஆக., 1 வரை பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்களாக தாணிப்பாறை பகுதிக்கு வந்த பக்தர்கள் காலை 6:00 மணி முதல் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை யேறினர். கோயிலில் மாலை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் 18 வகையான அபிேஷகங்கள் நடந்தன.
சந்தனகாப்பு அலங்காரத்தில் நந்தீஸ்வர் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று (ஜூலை 30) மாலை 6:00 மணி முதல் துவங்கி நடுநிசி வரை சிவராத்திரி பூஜைகள் நடக்கவுள்ளன. நாளை (ஜூலை 31) முக்கிய நிகழ்வான அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போலீஸ் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், எஸ்.பி., ராஜராஜன் நேற்று தாணிப்பாறை பகுதியில் ஆய்வு நடத்தினர். கோயிலுக்கு வரும் குழந்தைகள் காணாமல் போனால், எளிதில் கண்டறியும் வகையில், அவர்களின் பெயர், தாய், தந்தை பெயர், முகவரி, செல் நம்பர் எழுதப்பட்ட ஒரு ஸ்டிக்கர் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு: சதுரகிரியில் கடும் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு நிலவுகிறது. மலையடிவாரத்தில் மட்டும் பல்வேறு தனியார் அன்னதான மடங்களின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மலைப்பாதையில் தண்ணீர் பாட்டில் ரூ.50, பிஸ்கட்கள் மட்டுமே கிடைக்கின்றன. கோயிலில் தொன்னையில் கஞ்சிதான் வழங்கப்படுகிறது. அது போதுமானதாக இல்லை. நேற்று வெயிலும் கடுமையாக இருந்ததால் பக்தர்கள் தண்ணீருக்கு தவித்தனர். எனவே, பக்தர்கள் தேவையான உணவு மற்றும் தண்ணீருடன் மலையேறுவது நல்லது.