இன்று போய் நாளை வா: பீதி காரணமாக ரத்த காட்டேரி விரட்டும் மக்கள்!
வேலூர் : ஜோலார்பேட்டையை தொடர்ந்து, ஆம்பூரிலும் ரத்தக் காட்டேரி நடமாட்டம் குறித்து பீதி எழுந்துள்ளதால், வீடுகளின் முன், "இன்று போய் நாளை வா என, எழுதி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 40 கிராமங்களில், ரத்தக் காட்டேரியின் நடமாட்டம் இருப்பதாகவும், வீடுகளில் வந்து குடும்பத் தலைவர், தலைவியைக் கொல்லாமல் இருக்க, வீடுகளின் முன், "இன்று போய் நாளை வா என, எழுதி வைத்தனர் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள காளி கோவிலில் ஆடு, கோழிகள் அறுத்து சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் ஆம்பூரிலும் ரத்தக் காட்டேரி பீதி பரவியது. நேற்று முன் தினம் இரவு 12 மணிக்கு, ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் மணிகண்ட விலாஸ் என்பவர் வீட்டில் உள்ள பொருட்கள் திடீரென பறந்தன. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்து வந்து, அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் உள்ளவர்களை எழுப்பினர்.இந்த நேரத்தில் அவர்கள் வீடுகளிலும் தட்டு, முட்டு சாமான்கள் பறந்தன. உள்ளூரில் இருந்த மந்திரவாதி சடையாண்டியை அழைத்து வந்து காட்டிய போது, ரத்தக் காட்டேரியின் வேலை தான் என கூறி விட்டார். இந்த தகவல் சுற்றுப்புறங்களில் பரவியது. ஜோலார்பேட்டையில் வீடுகளில் முன் எழுதியிருந்த வாசகத்தை இங்கும் எழுதி விட்டால் ரத்தக் காட்டேரி வராது என கூறினர். ஆம்பூர் பி.கஸ்பா, ஏ.கஸ்பா பகுதிகளில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வீடுகளில், "இன்று போய் நாளை வா என்று சிகப்பு நிறத்தில் எழுதி அதற்கு பக்கத்தில் திரிசூலம் படமும் போட்டுள்ளனர். இரவு 7 மணிக்கு மேல் தெருக்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. சிறப்பு பூஜைகள் செய்து, ரத்தக் காட்டேரியை விரட்டி அடிக்க வேண்டும் என்று இப்பகுதியினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.