சென்னையில் கொலு கண்காட்சி துவக்கம்
சென்னை:வரும், 29ல் துவங்க உள்ள, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில், கொலு பொம்மை கண்காட்சி, குறளகத்தில் துவங்கியது.
கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த வும், கதர் கிராம தொழில் வாரியத்தின் வாயிலாக, ஆண்டுதோறும், கொலு பொம்மை கண் காட்சி நடத்தப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கண்காட்சி, சென்னை, குறளகத்தில் துவங்கியது. மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார், கண்காட்சியை துவக்கி வைத்தார். கைத்தறி துறை முதன்மை செயலர், குமார் ஜெயந்த் தலைமை தாங்கினார்.
கடந்தாண்டு கண்காட்சியில், அதிக விற்பனை செய்த, மூன்று கைவினைஞர்களுக்கு, கதர் கிராம தொழில்துறை அமைச்சர், பாஸ்கரன் பரிசு வழங்கினார்.கண்காட்சியில், தெய்வீக சிற்பங்கள், டெரக்கோட்டா வகை பொம்மைகள், மண், மரம், பீங்கான் பொம்மைகள் பார்வை யாளர்களை கவர்ந்து வருகின்றன.குறைந்தபட்சமாக, 10 ரூபாயில் துவங்கி, 25 ஆயிரம் ரூபாய் வரை, பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்தாண்டு, சிவகாமி அம்மன் விஸ்வரூபம், நங்கநல்லுார் ஆஞ்சநேயர், ராமானுஜர், நாமக் கல் நரசிம்மர் உள்ளிட்ட புதுவகையான பொம்மைகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அக்., 17ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.