உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதருக்கு இன்று வெள்ளி மாவடி சேவை!

ஏகாம்பரநாதருக்கு இன்று வெள்ளி மாவடி சேவை!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இன்று இரவு, பிரபல உற்சவமான, வெள்ளி மாவடி சேவை உற்சவமும், நாளை இரவு, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும், நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரமோற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு உற்சவம், கடந்த 27ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆறாம் நாள் காலை 63 நாயன்மார்கள் வீதியுலா, இரவு வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. நேற்று, எட்டாம் நாளை முன்னிட்டு, காலை ஆறுமுகப் பெருமான் எடுப்பு ரதக்காட்சி, மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனம், இரவு குதிரை வாகனம் உற்சவம் நடந்தது. ஒன்பதாம் திருவிழாவான இன்று காலை ஆள்மேல் பல்லக்கு, இரவு கோவில் தல மகிமை காட்சியை விளக்கும், வெள்ளி மாவடி சேவை உற்சவம் நடைபெறும். நாளை காலை சபாநாதர் தரிசனம், இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். மறுநாள் காலை 4 மணிக்கு, சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வருவார். வரும் 6ம் தேதி பகல் 12 மணிக்கு, கந்தப்பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், 7ம் தேதி காலை புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 8ம் தேதி காலை சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி, இரவு யானை வாகனம் உற்சவம், 9ம் தேதி காலை 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !