ஆராதனைக்கு முக்கியத்துவம்
சீனாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் எரிக் ஹென்றி. அவர் தினமும் தனது ஆன்மிகக் கடமைகளை தவறாது செய்து விடுவார். காலையில் எழுந்ததும் ஜெபிப்பது, வேதம் (பைபிள்) வாசிப்பது ஆகியவற்றை முடித்த பிறகே, உடற்பயிற்சி செய்ய புறப்படுவார்.ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களம் இறங்கி, முதல் பரிசு பெற்றார். பல பதக்கங்களைப் பெற்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.இதையடுத்து நடந்த போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்படும் என ஒலிம்பிக் குழுமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. எரிக் ஹென்றி இதில் பங்கேற்று வெற்றி பெறுவார் என சீனநாடே எதிர்பார்த்தது. ஹென்றிக்கும் அந்தப் போட்டியில் பங்கேற்க ஆசை. ஆனால், போட்டி நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என அறிந்ததும் அவர் குழப்பமடைந்தார். ஞாயிறு அன்று அவர் சர்ச்சுக்கு தவறாமல் செல்லும் பழக்கமுடையவர். போட்டியா? ஆலயமா? என மனம் அலை மோதியது.சீனநாட்டின் முக்கிய பிரமுகர்கள், அவரை போட்டியில் பங்கேற்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். ''ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக'' என்று ஆண்டவர் இட்ட கட்டளையும் அவரைச் சிந்திக்க வைத்தது. சிந்தித்து முடிவெடுத்தார்.ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று கனமடைவதை (பெருமைப்படுதல்) விட, ஆலயத்தில் தேவனை ஆராதித்து கனமடைவதையே மேலாகக் கருதி, ஆலயத்திற்குச் சென்றார். போட்டியில் பங்கேற்காததால், பலரும் இவரை 'பிழைக்கத் தெரியாதவன்' என்று வசை பாடினார்கள். ஹென்றியோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை.சில ஆண்டுகளுக்கு பின்னர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் அறிவிக்கப்பட்டது. ஹென்றி இந்தப் போட்டியில் பங்கேற்க பெயர் பதிவு செய்தார். தேர்வாளர்களோ, ''100 மீட்டருக்கு பிறகு, 200, 300 ஓடியிருந்தால் தான், 400க்குள் நுழைந்து வெற்றி பெற முடியும். எனவே, நீங்கள் இதில் வெற்றி பெற வாய்ப்பில்லை. இருப்பினும், <உங்கள் ஆர்வம் காரணமாக பெயரைப் பதிவு செய்து கொள்கிறோம்,'' என பதில் சொல்லிவிட்டனர்.ஆனால், எப்படியோ அவருக்கு 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடைத்து விட்டது. அவர் வெற்றி பெற மாட்டார் என்றே எல்லாரும் நினைத்தனர். ஆனால், அவரே முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். போட்டி நடத்தியவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அதிசயித்து விட்டார்கள். ஒரு நிருபர் அவரிடம்,''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்.''கடந்த போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு அழைத்தனர். அன்று தேவனின் ஆராதனையே உயர்வென்று நினைத்துச் சென்றேன். அந்த ஆராதனையின் பயனால் 400 மீட்டரில் வென்றேன்,'' என்றார்.நாம் ஒவ்வொருவரும் ஞாயிறு ஆராதனையை முக்கியத்துவப்படுத்துவோம். வாழ்வில் முன்னேறுவோம். ''உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக,'' என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள். ஆராதனையை அற்பமாய் எண்ணாதீர்கள்.