உள்ளூர் செய்திகள்

எல்லோரையும் உபசரிப்போம்!

பழத்தோட்டம் ஒன்றில் பணிசெய்து வந்த ஒருவரைப் பற்றி, அவ்வூர் மக்கள் அறிந்து கொள்ள முயன்றனர். அவரது பெயர், ஊர் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது அவரைப் பற்றி விசாரிக்க வந்தால், மறைந்து கொள்வார்.ஒருநாள், ஒரு சிறுவன் அவர் பணிசெய்த தோட்டத்துக்குள் வேலி தாண்டி புகுந்தான்.அங்கிருந்த ஆப்பிள் மரங்களில் இருந்த சில பழங்களைப் பறித்து ஒரு பையில் திணித்தான். அப்போது, தோட்டத்தில் பணி செய்தவர் அங்கு வந்துவிட்டார். பையனை எட்டிப் பிடித்தார். உடன் வந்த சிறுவர்கள் சிலர் வெளியே நின்றனர். அவர்கள், தங்கள் நண்பன், அவரிடம் உதைபட போவது உறுதி என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால், அவர் அவனிடம், ''தம்பி! எதற்காக இப்படி திருட்டுத்தனமாக உள்ளே புக வேண்டும். உனக்கு பழங்கள் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாமே! இந்தா! இன்னும் பழங்கள்!'' என்று சொல்லி பை நிறைய கொடுத்தார்.பயத்துடன் நின்ற அவன், கண்ணீர் வடித்து மன்னிப்பு கேட்டான். அவர் அவனைத் தேற்றி, ''வெளியே நிற்கும் உன் நண்பர்களுக்கும் இதைக் கொடு. <உங்களுக்கு பழம் வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அனைவருமே உ<ள்ளே வரலாம்,'' என்று உறுதிமொழியும் கொடுத்தார். எல்லாரும் மகிழ்ந்தனர்.மறுநாள் முதல் அவர்கள் தோட்டத்துக்கு மகிழ்ச்சியுடன் வர ஆரம்பித்தார்கள். அவர்களை மரத்தடியில் அமரச்செய்து பழங்கள் தந்ததுடன், இயேசுவின் போதனைகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். இது அவ்வூர் பெரிய மனிதர்களுக்கு தெரிய வந்தது. அந்த நாடு நாத்திகத்தில் நாட்டமுடையது. தங்கள் தேசத்தில் இப்படி ஒரு ஆன்மிக பிரசாரம் நடப்பதை அரசுக்கு அறிவித்தனர்.அரசாங்கம் தோட்டக்காரரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், தோட்டக்காரர் சிறையிலிருந்தும் மறைந்து விட்டார். அதன்பிறகு அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர் தேவதூதனாக விண்ணில் இருந்து அனுப்பப்பட்டவர் என்ற விபரம்...பாவம், அவர்களுக்கு எப்படி தெரியும்?''அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதனாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு,'' என்கிறது பைபிள்.அந்த தேவதூதரை தண்டிக்காமல் உபசரித்திருந்தால், அந்த நாடு பல பலன்களைப் பெற்றிருக்கும். அதை இழந்தது அவர்களின் கடவுள் நம்பிக்கையின்மையால் தான்! எனவே எல்லோரையும் தேவதூதர்களாகக் கருதி உபசரிக்க வேண்டும்.