வேண்டும் சமாதானம்
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் போல, புகழ் பெற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தவித்த சக அறிஞர்கள் சிலர் அவரை அவமானப்படுத்த நினைத்தனர். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அவரை அழைத்தனர். அவர் தன் நண்பர்களுடன் வந்தார். சாக்ரடீசின் இலையில் அழுகிய பழங்களும், கெட்டுப்போன உணவு வகைகளும் வைக்கப்பட்டன.சாக்ரடீசின் நண்பர்கள் அதிர்ந்தனர். புதிய உணவு பரிமாறும்படி அவர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்ல முற்பட்டனர். சாக்ரடீஸ் சைகை செய்து அவர்களை அமைதிப்படுத்தி விட்டார். மிக ரசனையாக அந்த உணவைச் சாப்பிட்டு முடித்தார். வெளியே வந்த நண்பர்கள், ''ஏன் இப்படி செய்தீர்கள்? அவர்களை ஒரு கை பார்த்திருக்க வேண்டாமா?'' என்றனர்.''அப்படி நான் கோபப்பட்டு செய்திருந்தால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். கை கொட்டி சிரித்திருப்பார்கள். அந்த வெற்றியை நான் அவர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை,'' என இதமாகப் பதிலளித்தார்.''சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக,'' என்கிறார் இயேசுநாதர்.நம்மை அவமானப்படுத்துவோரிடம் பொறுமையாக இருப்பதன் மூலம், நாம் தோல்வியடைந்ததாகக் கருத வேண்டியதில்லை. நிஜத்தில் நாமே வெற்றி பெற்றவர்கள்.