உள்ளூர் செய்திகள்

நல்லவருக்காக கெட்டவரையும் காப்பாற்றும் ஆண்டவர்

சிரியாவின் படைத்தளபதி நாகமான், ஒரு குஷ்டரோகி. போர் விஷயத்தில் புகழ் பெற்றவனாக இருந்தாலும், இந்த கொடியநோய் குணமாகாதா என்ற ஏக்கம் அவனுக்குள் இருந்தது. இந்த நேரத்தில் இஸ்ரவேலிலிருந்து வந்த ஒரு அடிமைச்சிறுமி,''எங்கள் நாட்டிலுள்ள தீர்க்கதரிசி எலிசாவிடத்தில் அவர் போவாரானால், அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்,'' என்று நம்பிக்கையுடன் சொன்னாள். இதை ஏற்று நாகமான் இஸ்ரவேல் சென்றான். தீர்க்கதரிசி இருக்கும் இடத்திற்குள் செல்லாமல், வாசலில் நின்றபடி, தீர்க்கதரிசி வெளியே வந்து தன்னைச் சந்திக்க வேண்டும் என்றும், நோயுள்ள இடத்தில் அவரது கையால் தடவி சுகப்படுத்த வேண்டும்,' 'என்று எதிர்பார்த்தான். தீர்க்கதரிசி அவனிடம்,''நீ போய் யோர்தானில் (அங்குள்ள நதி) ஏழுதரம் ஸ்நானம் பண்ணு. அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்,'' என்றார். அதைச் செய்ய விரும்பாத நாகமான், அந்த தீர்க்கதரிசி தன்னை மதித்து, கையால் தடவி சுகப்படுத்த வேண்டும் என விரும்பினான். தன்னை எங்கோ ஒரு நதியில் போய் நீராடச் சொல்வதாவது. எனக்கே கட்டளை பிறப்பிப்பதாவது'' என்று எண்ணினான். அதாவது, இந்த இடத்தில் அவனது கீழ்ப்படியாமை குணம் வெளிப்படுகிறது.மேலும், ''நான் ஸ்நானம் பண்ணி சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும், தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ!'' (வ.12) என்று தன்னுடைய நாட்டை மேன்மைப்படுத்தி இஸ்ரவேலை அற்பமாக எண்ணினான். இது அவனது தேசப்பற்று என்பதை விட 'வெறி' என்று தான் சொல்ல வேண்டும்.உண்மையில், நாகமானுக்குள் நிறைந்திருந்த ஏழு வகையான பாவத்தைக் கழுவவே எலீசா தீர்க்கதரிசி யோர்தானில் நீராடச்சொன்னார். ஆனால், அவன் முதலில் அதற்கு அடிபணியவில்லை. பின், அவன் தன் வேலைக்காரனின் சொல்லை ஏற்று யோர்தானில் மூழ்கினான். தன் மீது விசுவாசம் இல்லாத நிலையதிலும் தேவன் அவனை குணமாக்க சித்தம் கொண்டார். காரணம் என்ன?நாகமானின் வீட்டில் அடிமையாக இருக்கும் சிறுமி, ''என் நாட்டுக்குப் போனால், உனக்கு நோய் குணமாவது உறுதி,'' என்று தேவன் மீது வைத்த நம்பிக்கையுடன் அவனை அனுப்பி வைத்தாளே! அந்த விசுவாசம் பொய்த்துவிடக்கூடாது என்பதால், தன்னை மறுத்தவனுக்கும் அவர் சுகத்தைத் தந்தார்.சுகமடைந்ததும் அவனது மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ''இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்,'' என்றும், ''உமது அடியேன் இனி கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை'' என்ற தனது தீர்மானத்தையும் வெளிப்படுத்தினான். தனது பாவங்களில் இருந்து விடுதலையும் பெற்றுக்கொண்டான்.- தேவனின் வார்த்தை இதழிலிருந்து