ஆறாது ஆறாது அழுதாலும் தீராது! ஆனாலும் வழியுண்டு தாயே!
இறப்பு தாங்க முடியாத ஒன்று தான். குழந்தை இறந்தால் தாய் கதறித் துடித்து விடுவாள். ஆனால், அப்படி அழுவதால் என்ன லாபம்? ஏதோ! மனபாரம் குறையுமே அன்றி, வேறு பயனே இல்லை. அதேநேரம், இறந்தவர்கள் மீண்டும் கடவுளுடன் வருவார்கள் என்பதை நம்ப வேண்டும்.பிரிட்டிஷ் படைகள் ஒரு சமயத்தில் இங்கர்மண் என்ற இடத்தில் எதிரி படைகளுடன் போராடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு வீரன் மீது குண்டு தாக்கியது. அவனது கால்கள் சிதைந்து விட்டன. உடலில் இருந்து ரத்தம் பெருகி ஓடியது. அவன் தன் கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு, முழு பலத்தையும் ஒன்று கூட்டி வீரர்கள் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு வந்து சேர்ந்தான். அவசர அவசரமாக பெட்டியைத் திறந்தான். அதற்குள் அவன் மிகவும் விரும்பி வாசித்த பைபிள் இருந்தது.ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதால் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. கண்கள் இருண்டன. அந்த நிலையிலும் அவன் அந்த வேதப்புத்தகத்தைத் திருப்பினான். தான் அடிக்கடி விரும்பி வாசிக்கும் வசனத்தை இரண்டு முறை வாசித்தான்.''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்'' என்பதே அந்த வசனம். கடவுளை விசுவாசித்த அவனது உள்ளம் நிம்மதி அடைந்தது. ரத்தம் தோய்ந்த கரங்களால் பைபிளை அணைத்தபடியே அவனது உயிர் பிரிந்தது. 'இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தார் என்று விசுவாசிக்கிறோமே, அப்படியே இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூட கொண்டு வருவார்' என்று பைபிளில் சொல்லப்பட்டிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. ஆண்டவருடன் ஐக்கியமாகும் அனைவரும் மீண்டும் வருவார்கள் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்தக் காலத்திற்காக காத்திருக்க வேண்டும்.