உயர்ந்த இடத்தில் இருக்கும்போது..
இந்தக் காலத்தில் யார் எப்படிப்பட்டவர் என்பதை யாரறிவார். இன்று நம் கண்களுக்கு சாதாரணமாகத் தோற்றம் அளிக்கும் ஒருவர், பிற்காலத்தில் மேலான மனிதராக உயரலாம். எனவே யாரையும் ஏளனமாக பார்க்கக்கூடாது. புயலும், மழையும் கடுமையாக இருந்த இரவு அது. அப்போது வெளியூரில் இருந்து வந்த கணவன், மனைவி விடுதியை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கும் ரூம் காலியாக இல்லை. இப்படி கடைசியாக ஒரு விடுதிக்கு வந்தபோது, அங்கும் இடம் இல்லை என தெரிவித்தார் விடுதி காப்பாளர். ''சார்... நாங்கள் காலையில் இருந்து விடுதியை தேடி அலைகிறோம். பாருங்கள் இப்போது மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ப்ளீஸ்... சிறிய அறை இருந்தால்கூட சொல்லுங்கள். மழை நின்றவுடன்கூட கிளம்பி விடுகிறோம்'' என்றார் வந்தவர். ''இந்த மழை நேரத்தில் உங்களை வெளியே அனுப்ப எனக்கு மனமே இல்லை. இருந்தாலும் என்ன செய்வது ரூமே இல்லையே. சரி ஒன்று செய்யுங்கள். என் ரூமில் வேண்டுமானால் படுத்துக்கொள்ளுங்கள். நான் எங்காவது படுத்து சமாளித்துக் கொள்கிறேன்'' என்றார் காப்பாளர். இப்படி அடுத்த நாள் காலை பொழுது புலர்ந்தது. கணவனும், மனைவியும் அவ்விடத்தை விட்டு கிளம்ப தயாராக இருந்தனர். அப்போது அங்கு வந்த விடுதி காப்பாளரிடம், ''பெரிய விடுதியையே நிர்வகிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. யார் கண்டார். நானே உங்களுக்கு அத்தகைய விடுதியைக் கட்டித்தந்தாலும் தரலாம்'' என கூறினார். இதைக்கேட்டவர், 'நன்றியின் வெளிப்பாட்டால் இவர் இதுபோல் கூறுகிறார்' என புன்னகை பூத்தார். இப்படியாக இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் விடுதி காப்பாளருக்கு கடிதம் வந்தது. அதில், 'வணக்கம். என்னுடைய விடுதியின் நிர்வாகியாக உங்களை நியமித்திருக்கிறேன். நாளைக்கே வந்து பணியில் சேருங்கள்' என்று இருந்தது. கூடவே அவர் பயணம் செய்ய ரயில் டிக்கெட்டும் இருந்தது. 'யார் இதை அனுப்பியிருப்பார்கள்' என அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் அவர் நியூயார்க் கிளம்பி சென்றார். என்னவொரு ஆச்சர்யம். தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உதவிய அந்த மனிதர், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவர் வேறு யாருமில்லை. நியூயார்க் நகரில் பெரிய விடுதிக்கு சொந்தக்காரர் வில்லியம் வால்டார்ப் ஆஸ்டார்ப் ஆவார்.நாம் உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் நம்மை மதிக்கும். இதுவே உண்மை. ஆனால் உயர்ந்த இடத்தில் இல்லாதவர்களை நாம் மதித்தால், தர்ம தேவதை நம்மை மதிப்பாள்.