உள்ளூர் செய்திகள்

உயர்ந்தாலும் சரி! தாழ்ந்தாலும் சரி!

ஆண்டர்சன் என்பவர் ஏழ்மையில் வாடினார். இதைப்பார்த்து வருந்திய அவரது நண்பர், அவருக்கு மூடை துாக்கும் வேலையை ஏற்பாடு செய்தார். அங்கே 'இத்தனை மூடை துாக்கினால் இவ்வளவு சம்பளம்' என கணக்கு இருந்தது.முதல்நாள் அங்கு வேலைக்கு சென்றார் ஆண்டர்சன். கடைக்குள் நுழையும்போதே முதலாளி ஒரு தொகையை அவரிடம் நீட்டினார். ''ஐயா... எதற்காக இதை கொடுக்கிறீர்கள்'' எனக்கேட்டார். ''தம்பி... உன் குடும்ப சூழலை, உனது நண்பர் என்னிடம் சொன்னார். ஒருநாளைக்கு நீ இத்தனை மூடை துாக்குவாய் என கணக்கு வைத்து, இந்த சம்பளத்தை கொடுத்துள்ளேன். நீ நிறைவாக வேலை செய்வாய் அல்லவா...'' என்றார் முதலாளி. ''உங்களின் நல்ல மனம் எனக்கு புரிகிறது. இருந்தாலும் எனக்கு இது உறுத்தலாக இருக்கும். வேலை செய்த பிறகுகூட சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேனே'' என இழுத்தார். ''ஏன்? இது குறைவாக உள்ளதா...'' எனக்கேட்டார் முதலாளி. ''ஐயா... நான் அந்த நோக்கில் சொல்லவில்லை. நான் இந்த வேலைக்கு புதிது. என்னால் எத்தனை மூடை துாக்க முடியும் என்று தெரியாது. எனவே நான் வேலையை முதலில் முடித்துவிடுகிறனே. தவறாக நினைக்காதீர்கள்'' என மனதில் இருப்பதை இறக்கிவிட்டு, மூடையை துாக்க சென்றார் ஆண்டர்சன். பார்த்தீர்களா... இவரைப்போல் நாமும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் அல்லவா... அதாவது உங்களின் ஆற்றல் உங்களுக்குத்தான் தெரியும். இப்படி உங்களை அறிந்தால், வாழ்வில் உயர்ந்தாலும் சரி. தாழ்ந்தாலும் சரி. எதற்கும் மயங்க மாட்டீர்கள்.