உள்ளூர் செய்திகள்

எது உண்மை

ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தார் சாம்சன். அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து அவசரமாக மாட்டுத்தாவணி போக வேண்டும் என சொல்லி ஆட்டோவிற்குள் சென்று அமர்ந்தார் சாம்சன். கோரிப்பாளையம் சிக்னலில் மாற்றுத்திறனாளி ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அருகில் இருந்த வண்டிக்காரர்கள் எல்லோரும் பிச்சையிட ஆட்டோக்காரர் மட்டும் அமைதியாக பச்சை சிக்னலுக்காக காத்திருந்தார். சாம்சன் தன்னிடமிருந்த நுாறு ரூபாயை அவரிடம் கொடுக்கவும் ஆட்டோ கிளம்பவும் சரியாக இருந்தது. அவருக்கு உதவும் மனம் மட்டும் ஏன் இவருக்கு வரவில்லையே என்ன மனிதர் என நினைத்துக் கொண்டே வர... பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார் சாம்சன். அதை வாங்கி கொண்டு சில்லறைக்காக எதிரில் இருந்த கடையை நோக்கி தனது ஊன்று கோலை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ஆட்டோக்காரர். இதைப் பார்த்த சாம்சனின் தலை சுற்றியது. உடல் ஊனம் பெரிய விஷயம் அல்ல மனத்தில் ஏற்படும் தவறான எண்ணமே உண்மையான ஊனம் என்பதை உணர்த்தியது அவரின் செயல்பாடு.