உள்ளூர் செய்திகள்

பாரபட்சம் காட்டாதீர்!

ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். ஏனெனில், எல்லோருமே ஆண்டவரால் பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் தான். இஸ்ரேலின் அரசராக இருந்தார் தாவீது. இவரது தந்தை ஈசாய். தாவீதுக்கு முன்னதாக ஈசாய்க்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அந்த ஏழு பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார் ஈசாய். ஆனால், கடைக்குட்டி மகனான தாவீதுவிடம் அந்தளவு அக்கறை காட்டியதில்லை. தாவீது சிறுவனாக இருந்த காலத்திலேயே, ஆடுகளை மேய்க்கும் கடினமான பணியைக் கொடுத்தார். ''ஊரைவிட்டு வெகுதூரம் தள்ளியுள்ள மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்க்க வேண்டும். வீட்டுக்கு வரக்கூடாது. மேய்ச்சல் நிலத்திலுள்ள கூடாரத்திலேயே தங்க வேண்டும்,'' என்று கட்டளையும் இட்டார்.இதனால் அவனுக்கு ஆடுகள் மட்டுமே உறவாயின. தன் அன்பையெல்லாம் அவற்றின் மீது பொழிந்தான். ஆண்டவருக்கு இந்தச் செயல் மிகவும் விருப்பமாயிற்று. அவனை சிறப்பிக்க நினைத்த அவர், அவனை இஸ்ரேலின் ராஜாவாக்க எண்ணினார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை ஈசாயின் வீட்டுக்குப் போகச் செய்தார். அவரது பிள்ளைகளில் ஒருவரை ராஜாவாக நியமிக்க உத்தரவு இருப்பதாக அவர் ஈசாயிடம் சொன்னபோது, அவர் ஏழு பிள்ளைகளயும் வரிசையாக நிறுத்தினார். அப்போது கூட தாவீதுவை அவர் வரவழைக்கவில்லை.''எட்டாவது பிள்ளையும் வராவிட்டால், உங்கள் வீட்டில் சாப்பிடமாட்டேன்,'' என சாமுவேல் சொன்ன பிறகு தான், வேண்டாவெறுப்பாக தாவீதுவை வரவழைத்தார். ஆனால், அவரையே ராஜாவாகத் தேர்ந்தெடுக்கும்படி செய்தார் ஆண்டவர்.குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை இந்தச் சம்பவம் மூலம் அறிகிறோம்.