எதிர்பார்ப்பு வேண்டாமே!
ஏப்., 3 - புனித வௌ்ளிநமது பாவங்களை ஏற்று நமக்காக மரித்தவர் இயேசு. இதற்காக, அவர் நம்மிடம் கைம்மாறு எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவருக்கு கைம்மாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது வேறு ஒன்றுமல்ல! அவரது போதனைகளைப் பின்பற்றுவது தான். இதோ! வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய போதனைகளைப் பார்ப்போம்.ரகசியமாகச் செய்யும் செயல்கள் மற்ற மனிதர்களின் கண்களுக்கு வேண்டுமானால் தெரியாது. ஆனால், ஆண்டவருக்கு தெரியும். நீங்கள் ஒரு தர்மவான் என வைத்துக் கொள்வோம். உங்கள் தர்மத்தை நாலுபேர் பார்க்கும்படியாக செய்தால் தான், அது உலகத்துக்கு தெரியும் என நினைக்கிறீர்கள். இந்த தற்பெருமை கொண்டவர்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பதில்லை. நாலு பேருக்கு உதவி செய்து விட்டு, நாற்பது நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் கொடை வள்ளல்கள் மீது தேவன் பிரியமாய் இருப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது. பெயர் வர வேண்டும் என்பதற்காக செய்யும் தர்மச் செயல்களால் மனிதனுக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருடைய நெருக்கடியில் பங்கு கொள்பவருக்கே ஆண்டவரின் ஆசிர்வாதம் கிடைக்கும். இதுகுறித்து இயேசுகிறிஸ்து,''மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. நீயோ தர்மஞ் செய்யும்போது உன் தர்மம் அந்தரங்கமாய் இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை இடதுகை அறியாதிருக்கக் கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்'' என்று கூறுகிறார்.(மத்.6:1-4)அமைதியாக பிறருக்கு உதவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள புனிதவெள்ளி நாளில் உறுதியெடுப்போம். அது மட்டுமல்ல! பிரார்த்தனை என்பது ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். நாம் எந்த மனநிலையில் ஜெபிக்கிறோம் என்பதும், எந்தளவு மனம் ஒன்றி ஜெபிக்கிறோம் என்பதும் முக்கியம்.''கர்த்தாவே! நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் நாவில் சொல் பிறவாவதற்கு முன்னே, இதோ கர்த்தாவே! அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்''(சங்.139:1,4) என்ற வசனம் இருக்கிறது. அதாவது, நாம் ஜெபிப்பதற்கு முன்பே, இந்த மனிதன் நம்மிடம் என்ன கேட்கப் போகிறான் என்பது ஆண்டவருக்கு தெரியும். எனவே, நியாயமான வேண்டுதல்களையே ஆண்டவர் முன் வைக்க வேண்டும்.ஏனெனில் அவருடைய விருப்பத்திற்கு உட்பட்டு, ஜெபிக்கிற ஜெபங்களை அவர் கேட்பார்.