ஏழைகளுக்கான விழாக்கள்!
திருமணம், புதுவீடு புகுதல் ... இவற்றையெல்லாம் அமர்க்களமாக கொண்டாட வேண்டுமென நினைக்கிறோம். பந்தல், சீரியல் லைட், இசைநிகழ்ச்சி, பிரியாணி...சாப்பாட்டிற்கு ஒரு லட்சம், கச்சேரிக்கு 50ஆயிரம் செலவழித்தோம்... என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்'' என்று தம்பட்டம் அடிக்கிறோம்...இப்படி ஆடம்பரமாக நடந்தால் தான், விழா கொண்டாடிய திருப்தியே கிடைப்பதாக பலரும் எண்ணுகிறார்கள். பைபிளில் யோவான் 5ம் அதிகாரத்தில், ''ஊர் முழுக்க பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வேளையிலும், இயேசுநாதர் பெதஸ்தா குளத்தருகே அமர்ந்து நோயாளியைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார்,'' என சொல்லப்பட்டிருக்கிறது.இதன் உள்ளர்த்தம் என்ன? விழாக்கள் வருவதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான். கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற திருநாட்கள் ஆண்டுதோறும் வந்து போகின்றன. ஆனால், அந்த நாளில், எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம் என கணக்கு போட்டுப் பாருங்கள். நம் இல்ல விழாக்களில் விருந்துண்டவர்களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என சிந்தியுங்கள்.ஏழைகள் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே விழாக்களை நடத்த வேண்டும் என்பது இயேசுவின் எண்ணம். ஆடம்பரத்துக்காக செலவழிக்கும் பணத்தை ஏழை இல்லங்களுக்குக் கொடுங்கள். விழாக்களை அர்த்தமுள்ளதாக்குங்கள்.