கடவுளின் திட்டம் பலித்தது
ஈ மார்கோ கி.மு.8ம் நூற்றாண்டு...பண்டைய ஆசீரியா நாட்டின் தலைநகராகிய நினிவே பட்டணம், பாவங்களின் உச்கட்டத்தில் இருந்தது. பல குற்றச்செயல்கள் நிகழ்ந்தன. அதேநேரம், வீர தீர பராக்கிரமங்களில் சிறந்து விளங்கியது. அண்டை நாடுகளான எகிப்தும், ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பாவும் ஆசிரியாவிற்கு பக்கபலமாக இருந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட அந்நிய நாட்டு சேவகர்களும், மக்களும் மிகக்கொடூரமாக தண்டிக்கப்பட்டனர். குழந்தைகளின் கால்களைப் பிடித்துத்தூக்கி அவர்களின் தலைகளை. பாறைகளில் மோதி தலை சிதறும் வரை தூக்கி அடிப்பார்கள். இதில் கொடூரம் என்னவென்றால் அதை வேடிக்கை பார்ப்பதற்கு நகரமக்கள் தெருமுனைக்கு கூடி வருவார்கள்.ஆதர்த நிராரி 3(கிமு 810-782), சால்மனேசர் 4(கி.மு 782-772), அசூர்-தான் 3 (772-754 மற்றும் அசூர் நிராரி 5 (கி.மு 754-746) ஆகிய அரசர்களின் ஆட்சி காலங்கள் தான் இந்தக் கொடூரங்களின் உச்சக்கட்டம். அப்போது, மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காத்ஹேப்பர் என்ற கிராமத்தில் யோனா என்பவர் வசித்து வந்தார். அவருக்கு கடவுள் தரிசனமாகி, நினிவே பட்டணம் சென்று, அவர்களின் அக்கிரமத்திற்காக கடவுள் தண்டனையளிப்பார் என்று பிரசங்கம் செய்யும்படி கூறினார். அவர் இருக்குமிடத்திலிருந்து நினிவேயை அடைய ஏறக்குறைய 1120 கி.மீ தூரம் பாலைவனத்தில் பயணிக்க வேண்டும்.அது கடினம் என்பதால், கடல்வழியே செல்ல முடிவெடுத்தார். கப்பலில் சென்றால் பயண தூரம் 3420 கி.மீ., தர்ஷீஸ் (ஸ்பெயின்) பட்டணம் சென்று செல்ல வேண்டும்.ஆனால், கடவுளின் திட்டத்தை யார் தடுக்க முடியும்? பிரயாணத்தின் போது கப்பல் புயலில் அகப்பட்டுத் தத்தளிக்க, அந்நாட்டு வழக்கத்தின் படி யார் நிமித்தம் இந்த புயல் ஏற்பட்டது என்று தெரிய சீட்டுக் குலுக்கிப் போட்டனர். அது யோனாவின் பெயரில் விழுந்தது. அவர்கள் யோனாவின் வேண்டுகோளின்படி அவரை கடலில் தூக்கிப் போட்டனர். கடவுளின் திட்டப்படி யோனாவை ஒரு பெரிய திமிங்கலம் விழுங்கி மூன்றாவது நாளில் புறப்பட்ட இடத்திலேயே விட்டு விட்டது. திமிங்கலத்தின் வயிற்றிலிருந்த நாளில் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி, அவரின் சித்தத்திற்கு விரோதமாக யாரும் நடக்க முடியாது என்று தீர்மானித்து, மறுபடியும் பாலைவனம் வழியே நினிவே பட்டணம் சென்று பிரசங்கம் செய்தார். ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய பேச்சு நினிவே அரசரையும், மக்களையும் கவர்ந்து அவருடைய பிரசங்கம் அங்கே ஏற்கப்பட்டது. அதன் விளைவாக மக்கள் மனம்திருந்தி கடவுளின் தண்டனையிலிருந்து தப்பிவிட்டனர். நினிவே பட்டணமானது தகிரீஸ் நதியின் வடகிழக்குப் பகுதியில் ஹோஸ்ர் என்ற துணை நதி தகிரீஸில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்தது. சனகெரீப் என்ற மன்னரால் முதலில் கட்டப்பட்ட இந்தப் பட்டணம், அவருக்குப் பின் ஆண்ட மன்னர்களால் விரிவுப்படுத்தப்பட்டது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பட்டணத்தில் ஏறக்குறைய 6 லட்சத்திலிருந்து 20 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் என்று கணித்தனர். தற்போது இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டிருந்தாலும், அதன் அருகில் 19 கி.மீ வடக்கே கொர்சாபாத் என்ற நகரும், தெற்கே நிம்ருத் என்ற நகரும் அந்த பிரமாண்டமான பழைய திருந்திய மாநகராக இன்றைக்கும் சாட்சியளித்துக் கொண்டிருக்கிறது.