உள்ளூர் செய்திகள்

நான் ஏழை அவர் பணக்காரர் ஏன் இந்த வேறுபாடு?

சிலர், ''ஆண்டவரிடம் நான் என்னுடைய எல்லா கஷ்டங்களையும் சொல்லி விட்டேன். அவரிடம் பலமுறை ஜெபித்தேன். ஆனாலும், நான் கேட்டது கிடைக்கவில்லை. நினைத்தது நடக்கவில்லை. ஆண்டவர் என்னைக் கவனிக்கவில்லை. ஆனால், இதோ! என் அருகில் இருப்பவரின் ஜெபம் கேட்கப்பட்டது. அவர் கடந்த மாதம் குறிப்பிட்ட ஒரு வீட்டை வாங்கத் திட்டமிட்டார். அது தனக்கே அமைய வேண்டுமென ஆண்டவரிடம் ஜெபம் செய்தார். நினைத்தபடி அவருக்கு அந்த வீடு கிடைத்து விட்டது. ஆண்டவரிடம் ஏன் இந்த பாரபட்சம்?'' என நினைக்கிறார்கள்.ஆண்டவரிடம் ஜெபம் எடுபடாமல் போவதற்கு காரணங்கள் உண்டு.முதலில் பயம் அல்லது சந்தேகம். பைபிளில், ''நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது,'' என யோபு என்பவரால் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கும்போது, முதலில் அவரை நாம் நம்ப வேண்டும். அவரிடம் ஏதேனும் ஒன்றுக்காக விண்ணப்பிக்கும் போதோ, அவர் நமக்கு தந்துள்ள பொருட்கள் பற்றியோ சந்தேகமோ, பயமோ கொள்ளக்கூடாது. ஆண்டவரால் துன்பமே அருளப்பட்டாலும் கூட, அதுவும் நன்மைக்கே என ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.அடுத்து பாவச்செயல்கள்.ஆண்டவரிடம் ஜெபிக்க தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதி என்றால் பணமோ, பொருளோ அல்ல. செய்த பாவங்களுக்காக ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டபிறகு, மீண்டும் பாவச் செயல்களின் பக்கம் செல்லக்கூடாது. அப்படி பாவம் செய்பவனின் கோரிக்கையை ஆண்டவர் ஏற்கவே மாட்டார். ஒழுக்கமின்மை, கெட்ட வழக்கங்கள் ஆகியவையும் தேவனுக்கு எதிரானவை. ஆம்...புகை, மது. மாது ஆகிய பழக்கங்களெல்லாம் ஆண்டவரால் ஒதுக்கப்பட்டவை. இந்த பழக்கங்களையெல்லாம் வைத்துக் கொண்டு, ஆண்டவரிடம் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவனது ஒழுக்கமின்மையை காரணம் காட்டி, ஆண்டவர் அதை ஏற்கமாட்டார். மனதில் நல்ல எண்ணங்கள் கொண்டவர்களின் கோரிக்கை மட்டுமே ஆண்டவரின் சன்னிதான கதவைத் தட்டும்.