உள்ளூர் செய்திகள்

நம்பினால் எல்லாம் நடக்கும்

இங்கிலாந்தில் வசித்த பெண், தங்கள் பகுதி கவர்னரிடம், ஒரு அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்க கோரியிருந்தார். கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பாறைகள் நிறைந்த ஒரு குன்றுப் பகுதியை ஒதுக்கி, 'இதில் விடுதி கட்டிக் கொள்ளுங்கள்!' என சொல்லி விட்டார். இது தேவனின் செயல் என நம்பிய அப்பெண், அங்குள்ள பாறைகளை உடைத்து கட்டடம் கட்ட வேண்டுமானால் ஏற்படும் செலவை எண்ணிப் பார்த்தார். யோசிக்கும்போதே மலைப்பாக இருந்தது. ஆனாலும் அவர் கர்த்தர் மீது கொண்டிருந்த விசுவாசத்தால் கவலைப்படவில்லை. கர்த்தரிடம்தொடர்ந்துஜெபித்தார். சில நாட்கள் கழிந்து ஒரு கான்ட்ராக்டர் வந்தார். ''சகோதரி! நான் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவை. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்! நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன்,'' என்றார்.பெண்மணியும் சம்மதித்தார். பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் பெருந்தொகை அப்பெண்ணுக்கு தரப்பட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, செலவே இல்லாமல், சமதளமான நிலத்தில், கிடைத்த பெருந்தொகையைக் கொண்டு விடுதியும் கட்டினார் அப்பெண். உலகில் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவுமில்லை. அனைத்து பிரச்னைக்கும் ஆண்டவரே தீர்வாக இருக்கிறார். பைபிளில்,''விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் ரட்சிக்கப்படுவான். விசுவாசியாகாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்,'' என சொல்லப்பட்டுள்ளதை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.