உள்ளூர் செய்திகள்

அவரது வருகைக்கு காத்திருப்போம்!

இயேசு மீண்டும் வருவார். நமது பாவங்களை ஏற்று ஆறுதலளிப்பார் என்பதற்கு சான்று ஏதாவது இருக்கிறதா? பைபிளை வாசித்தால் இதற்குரிய விடை கிடைக்கும்.''உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது,'' என ஏசாயா 59:2 ல் வாசிக்கலாம். அக்கிரமம் நிறைந்த இந்த உலகிற்கு அவர் ஒருமுறை வந்தார். அப்போது, ''அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும், தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்,''என்று ஏசாயா 53:7 கூறுவதைப் போல, சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக உயிரும் விட்டார்.மீண்டும் அவர் நிச்சயம் வருவார். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் பைபிள் சொல்கிறது.''நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்,'' என்ற யோவான் 1:9 வசனத்திலுள்ள உண்மையை உணர வேண்டும். மனப்பூர்வமாக ஜெபித்தால் அவர் மீண்டும் வருவார். காயப்பட்டு கிடக்கும் இந்த பூமியை தன் ரத்தத்தை ஊற்றி மீண்டும் கழுவுவார். நாம் மீண்டும் ஒருமுறை பாவ விமோசனம் பெறுவோம்.