அன்புதான் இன்ப ஊற்று!
'ஒருவருக்கொருவர் அன்பையும், சமாதானத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள்' என திருப்பலிகளில் சொல்லப்படுவதுண்டு. மக்களும் அவ்வாறே ஒருவரை ஒருவர் வணங்கி, முன்பின் தெரியாதவரானாலும், அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.இந்த அன்பின் சக்தியைத் தெரிந்து கொள்ளுங்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதி வில்லியம் மாக்கின்ஸியும், தொண்டர் ஒருவரும் டிராமில் பயணித்துக் கொண்டிருந்தனர். சற்றுதூரம் சென்றதும், ஒரு கர்ப்பிணிப் பெண் வண்டியில் ஏறினார். இடம் இல்லாததால் கஷ்டப்பட்டு நின்றார். வில்லியத்துடன் சென்றவருக்கு, அவள் எங்கே இடம் கேட்டுவிடுவாளோ என பயம்..., உடனே தன் கையில் இருந்த செய்தித்தாளை முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிப்பது போல நடித்தார். இதைக் கவனித்த வில்லியம்ஸ், அந்தப் பெண்ணை தன் இடத்தில் அமரச்சொல்லி விட்டு நின்று கொண்டார். சில ஆண்டுகள் கழிந்தன. வில்லியம் மாக்கின்ஸி அமெரிக்காவின் 25வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். தன் முன்னாள் சகாவைச் சந்திக்க அவரது தோழர் வந்தார். ''அதிபரே! நானும் அரசியல்வாதிதானே! அமெரிக்க காங்கிரசுக்காக பல பணிகளைச் செய்துள்ளேன். என்னை ஒரு மாகாணத்தின் அதிபராக ஆக்குங்களேன்!'' என்றார்.மாக்கின்ஸியோ 'பார்க்கலாம்' என சொல்லி அனுப்பி விட்டார். குறிப்பிட்ட அந்த மாகாணத்துக்கு வேறு ஒருவரை அதிபராக நியமித்து விட்டார். மாக்கின்ஸின் மனதில் பழைய நினைவலை ஏற்பட்டது. 'ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிறிது தூரம் செல்ல இடம் கொடுக்காத இவரிடம், ஆட்சி சிக்கினால் மக்கள் என்னாவார்கள்?' என்ற சிந்தனை தான் அது.பார்த்தீர்களா! உதவும் மனப்பான்மையும், அன்பும் எவ்வளவு உயர்ந்ததென்பதை! ஒருவருக்கொருவர் அன்புடனும், சமாதானத்துடனும் வாழுங்கள் என்ற போதனையை ஏற்று நடந்தால் வாழ்வில் உயர்வது உறுதி.