உள்ளூர் செய்திகள்

நட்சத்திர பேச்சாளர்

ஐநுாறு ரூபாயை காண்பித்து, இது யாருக்கு வேண்டும் என பேச்சாளர் ஒருவர் மக்களைப் பார்த்துக் கேட்டார். அனைவரும் கையை உயர்த்தினர். கொஞ்சம் பொறுங்கள் என சொல்லி விட்டு அதை கசக்கினார். இப்போது யாருக்கு வேண்டும் என கேட்டார். மீண்டும் அனைவரும் கைகளை உயர்த்தினர். பின்னர் அந்த நோட்டை அழுக்காக்கி விட்டு இது உங்களுக்கு வேண்டுமா எனக் கேட்டார். அப்போதும் கைகளை உயர்த்தினர். பேச்சாளர் சொன்னார். ''என் அன்புக்குரியவர்களே ரூபாயை கசக்கினாலும் அழுக்கானாலும் அதன் மதிப்பு குறையாது. அது போலத்தான் உங்களது வாழ்க்கையும். சிலரால் கசங்கும். காலில் போட்டு மிதிப்பார்கள். அதற்காக கவலைப்படாதீர்கள். நம்பிக்கை இழக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். என்ன சொல்வது புரிந்ததா'' என்றார். கரகோஷம் விண்ணைப் பிளந்தது.