நல்லதையே நினைப்போம்!
இந்த உலகத்தில் எல்லார் மனதிலும் ஒரு கேள்வி இருக்கிறது.''ஏன் கடவுள் உலகத்தைப் படைக்க வேண்டும்? இன்பத்தையும், சிரமத்தையும் ஏன் தர வேண்டும்?''இதற்குப் பதில் இதுதான்.தேவன் மனிதர்களை படைக்கும்போது, தம்மை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அறிவதற்காக நமக்கு சுதந்திரம் கொடுத்தார். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அவர், தன்னால் படைக்கப்பட்டவன் தன்னை மதிக்கிறானா என்பதை அறியத்தான், ஒரு மரத்தின் கனியை மட்டும் விலக்கினார். ஆனால், மனிதன் அதைச் சாப்பிட்டான்.இப்போது சொல்லுங்கள், கடவுள் பிரச்னையை உருவாக்கினாரா? மனிதன் பிரச்னையை உருவாக்கிக் கொண்டானா? அவர் மகிழ்வுடன் தந்த அத்தனையையும் விட்டுவிட்டு, அவர் விலக்கியதை சாப்பிடுவானேன்?இன்றைக்கு அநேகமாக எல்லாருமே விலக்கப்பட்ட போதை, உணவு வகைகள் என சாப்பிடுகிறார்கள். கெட்ட வழக்கங்களுக்கு ஆளாகி உடம்பைக் கெடுத்துக் கொள்கின்றனர். கடவுள் குடிக்கச் சொன்னாரா? சீட்டாடச் சொன்னாரா? புகை பிடிக்கச் சொன்னாரா? எதுவுமே இல்லையே! இப்படி, கடவுள் தந்த நல்லதையெல்லாம் விட்டு விட்டு, கெட்டதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாவத்தைச் சம்பாதித்திருக்கிறார்கள். ஆனாலும் கூட, தேவன் மனிதர்கள் மேல் கருணை கொண்டு மனித ரூபத்தில் வந்தார். எல்லாரது பாவங்களையும் ஏற்று, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினார். இதன்பிறகும், மனிதர்கள் பாவத்தின் பாதையில் சென்றால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு பைபிளில்,''தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்'' (யாக்: 4:8) என்ற வசனம் இருக்கிறது.ஆம்! இன்று முதலாவது தேவன் நமக்களித்த நல்ல விஷயங்களை மட்டும் மனதில் கொள்வோம். பொறாமை, பொய், ஏமாற்று, கெட்ட வழக்கங்களைக் களைவோம். நல்லதையே மனதில் நினைத்து, நல்லதையே பிறருக்குச் செய்ய உறுதியெடுப்போம். ஆண்டவர் என்றும் நம்மோடு இருப்பார்.