உள்ளூர் செய்திகள்

ஐஎன்ஆர்ஐ என்றால் என்ன?

இயேசு அறையப்பட்டுள்ள சிலுவையின் மேல்பகுதியில் ஐஎன்ஆர்ஐ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்குரிய விளக்கம் தெரியுமா?ரோம சாம்ராஜ்ய சட்ட நியதியின்படி, மிகக்கொடிய குற்றவாளிகளுக்குத் தான் சிலுவையில் அறையும் தண்டனையை வழங்குவர். சிலுவையின் <உச்சியில் அவன் செய்த குற்றத்தின் சுருக்கத்தை எழுதி, பார்க்கிற யாவரும் வாசித்தறிந்து அவனை இகழ்ந்து நிந்திக்கும் பொருட்டு அதையும் தொங்கவிடுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு நடந்தது. வழக்கை விசாரித்த தேசாதிபதியாகிய (அரசன்) பிலாத்து, ''நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்,'' என்று சொன்னவன், சூழ்நிலையின் நெருக்கத்தால் இயேசுவை சிலுவை மரணத்திற்கு ஒப்புவித்தான். தொங்கவிட வேண்டிய குற்றச்சாட்டை எழுதும்போதும் ''நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா'' என்றே எழுதப்பட்டது. இதையே 'ஐஎன்ஆர்ஐ' என்ற எழுத்துக்களால் சிலுவையின் உச்சியில் குறித்திருப்பர். 'ஐ' - ஜீசஸ் (இயேசு), என்- நாசரேத், ஆர்- ரெக்ஸ் (கிங்) ஐ- இட்யூம்ஸ் (யூதா). இப்படி எழுதப்பட்டதை மாற்றும்படிகேட்கும் இந்த விஷயத்தில் பிலாத்து பிடிவாதமாக மறுத்து விட்டான்.வழக்கத்திற்கு மாறான மற்றுமொரு நிகழ்வும் நடந்தது. இந்த வாசகம் எபிரெயு, கிரேக்கு, லத்தீன் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. எபிரெயு அப்பகுதி மக்கள் பேசுகிற மொழி. லத்தீன் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சிமொழி. கிரேக்கு அன்றைய உலகப் பொதுமொழி.சரி... மூன்றிலும் எழுதக் காரணம் வேண்டுமல்லவா! அதையும் கேளுங்கள்.பாலஸ்தீன மக்கள் மாத்திரமல்ல, ரோம் சாம்ராஜ்யத்து மக்கள் மாத்திரமல்ல, உலகத்தினர் அனைவரும் இயேசுவின் மரணத்தை அறிய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டிருந்தது. அவர் 'யூதர்களின் ராஜா' என்று எழுதப்பட்டிருந்ததை உலகமே அறிந்து கொள்ள வேண்டும் என்பதே தேவ நோக்கமாக இருந்தது. அவரே 'உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என்ற வசனத்தை இங்கே நினைவு கூரலாம். யூதர் அல்லாத சமாரிய மக்கள் 'அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்' என்றனர். இயேசுவை ராஜா என்று அவரை சிலுவையில் அறைந்தவர்கள் கேலியாகச் சித்தரித்தனர். ஆனால், நிஜமாகவே அவர் உலகத்தின் ராஜாவாகி விட்டார்.