ரொம்ப கவனம் மாணவர்களே!
பள்ளிகள் திறந்து விட்டன. ஆரம்பம் முதலே மாணவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். மாதத்தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தரப்படும் கேள்வித் தாள்களை மிகக் கவனமாகப் படித்து பதில் எழுத வேண்டும். ஒரு கதையைக் கேளுங்களேன்!குரு ஒருவர் மாணவர்களுக்கு கணிதப்பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ""மாணவர்களே! ஒரு தந்தை... அவருக்கு நான்கு பிள்ளைகள். தன்னிடமிருந்த 50 ஆயிரம் பொற்காசுகளில் ஆளுக்கு பத்தாயிரம் வீதம்பிரித்துக்கொடுத்தார். மீதியிருந்ததை மூத்த மகனிடமே கொடுத்து விட்டார். இப்போ சொல்லுங்க! மூத்த பிள்ளைக்கு என்ன வரும்?' என்று கேட்டார்.ஒரே ஒரு மாணவனைத் தவிர மற்றவர்கள் ஆர்வத்துடன் "இருபதாயிரம் பொற்காசுகள்' என சரியாக விடை சொன்னார்கள். பதில் சொல்லாத மாணவனிடம், ""நீ மட்டும் ஏன் பதில் சொல்லவில்லை? சொல், மூத்த மகனுக்கு என்ன வரும்?'' என்று திரும்பவும் கேட்டார். அவன் பணிவுடன்,""குருவே! மூத்தவனுக்கு பிறரை விட தனக்கு அதிக பணம் வந்துவிட்டதே என்ற அகங்காரம் வரும். கர்வம் பிறக்கும். அதோடு, தன் பிள்ளைகளுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காத தந்தைக்கு பாவம் வரும்,'' என்று பதில் சொன்னான். அதைக்கேட்ட சக மாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால், குரு மகிழ்ந்தார். மாணவர்களை அதட்டி அடக்கினார்.""நீ சொன்ன விடையே சரியானது, இதை எப்படி கண்டுபிடித்தாய்?'' என்றார்.""குருவே! உங்கள் கேள்வியில் மூத்த மகனுக்கு எவ்வளவு கிடைக்கும் என கேட்கவில்லை. "என்ன வரும்' என்று தான் கேட்டீர்கள். இரண்டு சொற்களுக்கும் வித்தியாசம் உள்ளது. எவ்வளவு கிடைக்கும் என்பது கணிதம். என்ன வரும் என்பது ஆன்மிகம். அதைக் கொண்டே பதிலளித்தேன்,'' என்றார். மற்ற மாணவர்கள் இந்த விளக்கம் கேட்டு தலைகுனிந்தனர். பார்த்தீர்களா மாணவர்களே! தேர்விலும், இப்படி சிறு வித்தியாசத்துடன் பொடி வைத்து கேள்விகள் கேட்கப்படும். எனவே, கவனமாகக் கேள்வித்தாளைப் படித்து இப்போதே விடையளித்தால், முழுஆண்டுத் தேர்விற்கு சிறந்த பயிற்சியாக அமையும்.