தாயை காத்த தனயன்
காஷ்யப முனிவரின் முதல் மனைவி கத்ரு. இவளது மகன் ஆதிசேஷன். இவன் திருமாலுக்கு குடையாகவும், படுக்கையாகவும் இருக்கிறான். இரண்டாம் மனைவி வினதையின் மகன் வைனதேயன் என்ற கருடன். ஒருமுறை, கத்ரு வைத்த போட்டியில், வினதை தோற்று விட, அவளது அடிமையானாள். தேவலோகத்திலுள்ள அமிர்த கலசத்தை தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் கொண்டு வந்து கொடுத்தால் விடுதலை தருவதாக நிபந்தனையும் விதிக்கிறாள்.தாயின் துயர் பொறுக்காத கருடன் தேவலோகம் சென்று கலசத்தை தன் வலிமையால் பெற்று வந்தான். அவனுக்கு திருமால் அருள் வழங்கி, அவனை வாகனமாக ஏற்றார். கத்ருவிடம் கலசத்தை ஒப்படைத்தான். தாயை அடிமைத்தளையில் இருந்து மீட்டான். கத்ருவும், பிள்ளைகளும் நீராடி விட்டு வந்து அமிர்தம் பருகலாம் என நினைத்திருந்த வேளையில், இந்திரன் வந்து கலசத்தை எடுத்துச் சென்று விட்டான். அவர்கள் ஏமாந்து போனார்கள். இப்படிப்பட்ட கருடனைப் பற்றி ஆண்டாள், தனது நாச்சியார் திருமொழியில் அருமையாகப் பாடுகிறாள்.மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் <உரைப்பானை இங்கே போதக் கண்டீரே!மேலால் பறந்த வெய்யில் காப்பான் வினதைச் சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தைக் கண்டோமே!'கருட' என்ற சொல்லுக்கு 'சிறகு' என்பது ஒரு பொருள். அதனால் தான் வினதையின் மகன் கருடன் என்று குறிப்பிடுவதற்குப் பதில் ' சிறகு' என்று குறிப்பிட்டாள் ஆண்டாள். இன்று கருடபஞ்சமியை ஒட்டி தாயைக் காத்த அந்த தனயனை வணங்குவதுடன், நம்மைப் பெற்ற தாயிடமும் ஆசிபெற்று நற்பலன்களைப் பெறுவோம்.