உள்ளூர் செய்திகள்

துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!

உற்சாகப்படுத்துகிறார் சின்மயானந்தர்* ஒரு மனிதனின் கவுரவம் என்பது, புத்தியை அடிப்படையாகக் கொண்டு உண்மையாக வாழ்வதில் தான் இருக்கிறது. புறவுலகச் சவால்களால் அலைக்கழிக்கப்பட்டு மனிதர்கள் தங்கள் புத்தியை இழந்து விடுகிறார்கள். * உலகத்தில் அனுபவம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகும். உலகத்தை அனுபவியுங்கள். ஆனால், உலகத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டுவிடாமல் இருக்க பாதுகாப்பான அனுபவம் தேவை.* தர்மசாஸ்திரங்கள் நம் இன்பத்தையும், சுதந்திரத்தையும் தடுப்பதில்லை. மாறாக சுகமான அனுபவங்களுக்கு நாம் அடிமையாகி விடக்கூடாது என்றே அறிவுறுத்துகின்றன.* வாழ்க்கை இருண்டு விட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. துணிச்சலுடன் முன்னேறுங்கள். மனதிலுள்ள துயரங்கள் விலகி விடும். நல்லெண்ணங்களையும், முயற்சியையும் கைவிடாதீர்கள். தீமைகள் யாவும் நம்மை விட்டு விலகிவிடும்.* கோபம், பேராசை, பொறாமை போன்ற தீயகுணங்கள் நம்மிடம் உள்ள ஆற்றலை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆற்றலை இழந்தால் நம் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும்.* உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ளுங்கள். அப்போது அளவற்ற பேராற்றல் உங்களிடத்தில் உருவாகி வருவதை உணரமுடியும். * ஆறானது தண்ணீருடன் சம்பந்தப்பட்டிருப்பதுபோல, மனம் எண்ணங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. தண்ணீரின் ஓட்டத்தால் ஆறு உருவாவதைப் போல, எண்ணங்களின் ஓட்டமே மனமாக வெளிப்படுகிறது.* பகவத்கீதையை ஒருமுறை உன்னுள் அனுமதித்தால் போதும். நிறைய நற்பலன்கள் உண்டாகும். கீதை காட்டும் பண்புகளை வாழ்வில் ஏற்றுக் கொண்டால் மனிதவாழ்வில் ஒளி உண்டாகும்.* மனதில் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும், ஆசைகளையும் அகற்றி இறைத்தன்மையை மலரச் செய்வது தான் ஆன்மிகத்தின் முடிவான குறிக்கோள்.* நம் மனதை புத்தியால் ஆட்சி செய்ய வேண்டும். புத்திக்கு மனம் தோழியைப் போலத் துணைபுரிய வேண்டும். மனம் மற்றும் புத்தியின் கூட்டுறவால் மனிதவாழ்வு முழுவளர்ச்சி பெறும்.* தன் உண்மையான இயல்பை மனிதன் அறியவேண்டும். தனக்குரிய பூரண வளர்ச்சியை அவன் அடைவதற்குத் துணை செய்யக்கூடிய சாதனம் தான் தியானமாகும்.* நமக்கு சாஸ்திரநூல்களை வகுத்துத் தந்த பெரியோர்கள், தமக்கென்று எந்த இன்பத்தையும் நாடியதில்லை. அதனால் அவர்களுக்கு எந்தவிதமான துன்ப அனுபவமும் ஏற்பட்டதில்லை.* சாந்தம் என்பது ஒரு மனநிலை அவ்வளவே. ஒரு ஆசையை நிறைவேற்றி வைத்தால் மனம் அடுத்த ஆசையில் காலூன்றுகிறது. அந்தக்குறையை நிரப்பினால் மற்றொரு ஆசை மனதில் உதிக்கிறது. பூரண அமைதியில் தான் மெய்யான இன்பம் இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை.