கொப்பளித்த பிறகே சாப்பிடுவாரு!
கொப்பளித்த பிறகே சாப்பிடுவாரு! பழங்காலத்தில் வகுக்கப்பெற்ற சடங்கு முறைகள் ஸ்ரீரங்கத்தில் இன்றளவும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதிகாலையில் ஒரு பசுவும், யானையும் கருவறைக்கு முன்னர் எதிரெதிரே நிறுத்தப்படும். அப்போது இசையுடன் பெருமாளின் முன்னர் திருப்பள்ளியெழுச்சி பாடல் பாடப்பட்டு, திரைச்சீலை அகற்றப்படும். துயிலெழும் பெருமாள், லட்சுமியின் அம்சமான பசுவையும், யானையையும் பார்த்து விட்டு அன்றைய நாளை துவங்குவதாக ஐதீகம். பசுவும் யானையும் கிளம்பியவுடன் கோயில் ஜோதிடர், பெருமாள் முன்னர் அன்றைக்கும், மறுநாளுக்கும் உரிய திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் ஆகியவற்றை உரத்த குரலில் வாசிப்பார். பின்னர் சுத்திபூஜைகள் நடக்கும். இது முடிந்ததும் பணியாளர் ஒருவர், கண்ணாடியை பெருமாளின் முன்னர் காட்டுவார். நண்பகல் பூஜையைத்தவிர, மற்றைய நேரங்களில் வெந்நீராலேயே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பச்சைக்கற்பூரம் கலந்த தைலம் சாத்தப்படுவது வழக்கம். தூய உலர்ந்த ஆடைகள் சாத்தும்போதும், பூமாலைகள் அணிவிக்கும்போதும், அணிகலன்கள் அணியும்போதும் இசை வாசிப்பது மரபு. நைவேத்யம் செய்த பின், தாம்பூலம் அளிப்பதும், தாம்பூலம் தரித்தபின் வாய்கொப்பளிக்கும் சடங்கு நடத்துவதும் வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.