உள்ளூர் செய்திகள்

அம்மனுக்கு பிடித்த ஆடி

ஆடி மாதம் வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்கு உரிய மாதம். பூமிதேவி ஆண்டாள் நாச்சியாராக அவதரித்தது ஆடி மாதத்தில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க வரமளித்தார். சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசஷேமானதாக இருக்கும். சிவன் ஆடி மாதத்தில் சக்திக்குள் ஐக்கியமாகி விடுவதாக ஐதீகம். அம்மன் வழிபாட்டுக்கு ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மிகவும் உகந்தவை.ஆனந்தமளிக்கும் அபிஷேகம்* கோயில்களில் அம்மனுக்கு 12 வகை திரவியங்களால் அபிஷேகம் நடத்துவர். நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம், தண்ணீர். * அபிஷேகத்தை 24 நிமிடம் மட்டுமே செய்ய வேண்டுமென ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. சில கோயில்களில் இதை இருமடங்காக 48 நிமிடங்கள் நடத்துவர். * அபிஷேகத்தின் போது பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கே பெற்று அருள் அலைகள் கருவறையில் இருந்து கோயில் முழுவதும் பரவும்.* அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்தாலும், குடித்தாலும் நோய்தீர்ந்து புத்துணர்வு பிறக்கும். * கோயிலை ஒருமுறை வலம் வந்த பிறகு பாலை அபிஷேகத்திற்கு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.மனம் குளிர மஞ்சப்பால்* மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி செவ்வாய், வெள்ளியன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபடுவர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மனருளால் நாடு செழிக்க மழை பெய்யும் என்பது ஐதீகம். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்மனுக்கும், வாகனமான சிம்மத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு 'மஞ்சப்பால்' என்பது பெயர். கன்னிப்பெண்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்தால் அம்மன் மனம் குளிர்ந்து திருமணயோகம் உண்டாகும்.* அம்பாளுக்குக் காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம், பச்சை பட்டுகளும், அர்த்தஜாமத்தில் வெண் பட்டில் சிவப்பு அல்லது பச்சை கரை உள்ள பட்டுப்புடவைகளும் சாத்த வேண்டும். * அம்பாளுக்கு அருகம்புல் சேர்க்கக்கூடாது. சிவப்பு மலர்கள் ஏற்றவை. ஆடியில் படியுங்கதலயாத்திரை சென்ற அகத்திய முனிவர் பாவச்சுமையால் மக்கள் துன்பப்படுவது கண்டு வருந்தினார். தீர்வு வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாக மகாவிஷ்ணு எழுந்தருளினார். அவரிடம் அகத்தியர், பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வழிகாட்டுமாறு வேண்டினார். அதற்கு ஹயக்ரீவர், ''ஜகன்மாதாவான பராசக்தியின் அருள்வடிவமான லலிதாம்பிகையை வழிபட்டால் துன்பம் தீரும்'' என்று சொல்லி பராசக்திக்குரிய ஆயிரம் திருப்பெயர்களை ரகசியமாக உபதேசித்தார். அதுவே 'லலிதா சகஸ்ரநாமம்' எனப்படுகிறது. ஆடியில் இதைப் படித்தால் பாவம் பறந்தோடும்.அவ்வையார் நோன்புதாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர். உப்பில்லாத பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைப்பர். இந்த சமயத்தில் ஆண்கள் அருகில் இருப்பது கூடாது. பூஜையை தலைமையேற்று நடத்தும் வயதான சுமங்கலி, அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். முடிவில் வட்ட வடிவ பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில் ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் இந்த வழிபாட்டை நடத்துகின்றனர்.நோயில்லா வாழ்வு பெற... ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்துாள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து, அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்குவர். மாரி, காளி, துர்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. இதனால் நோய் இல்லாத வாழ்வு உண்டாகும்.குழந்தை மனசு வேணுமா...காத்யாயன மகரிஷி குழந்தை வரம் வேண்டி தவம் புரிந்தார். பார்வதியும் அவரது மகளாகப் அவதரித்து 'காத்யாயனி' என பெயர் பெற்றாள். இதில் விசஷே தத்துவம் அடங்கியிருக்கிறது. குழந்தை மனதில் சிரிப்பு, கோபம், அழுகை என உணர்ச்சிகள் எல்லாம் அந்தந்த நேரத்தோடு மறைந்து விடும். உலக மாதாவான அம்பிகை குழந்தையின் சிறப்பை உணர்த்தவே காத்யாயனியாகப் பிறந்தாள். அவளை வழிபட்டால் நமக்கும் குழந்தை மனசு உண்டாகும். அசுரர்களை அழிப்பதில் கோபக்காரி என்றாலும், பக்தர்களை காப்பதில் குழந்தை மனம் கொண்டவளாக இருக்கிறாள்.தாய் வீட்டில் விருந்துஆடியில் புதுமணத் தம்பதியருக்கு பெண்ணின் தாய் வீட்டில் விருந்து வைப்பர். மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பர். பெண் தாய் வீட்டில் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையான கோடை காலத்தில் குழந்தை பிறக்கும். இதனால் தாய், சேய் உடல்நலன் பாதிக்கலாம் என்பதால் இந்த பழக்கத்தைக் கடைப்பிடிப்பர்.