கேளுங்க சொல்கிறோம்!
வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.** குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க என்னென்ன வழிகளை பெற்றோர் மேற்கொள்ளலாம்? எஸ். லதா, உசிலம்பட்டிபயமுறுத்தல் அறவே கூடாது. சேஷ்டை செய்யும் குழந்தைகளுக்கு கூட அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொன்னாலே அவர்கள் மனதில் பதிந்து விடும். ஒன்றுக்கு பத்துமுறை அதைச் சொல்ல வேண்டும். குழந்தை வளர்ப்பில் பொறுமையை நாம் கைவிட்டால், அவர்களும் பொறுமையிழந்து தான் போவார்கள். ஆன்மிகத்திலுள்ள குட்டிக்கதைகளை அவரவர் வயதுக்கேற்றாற் போல் சொல்லித் தருவது, காலையும் மாலையும் சுவாமியை நாம் வணங்கி அவர்களையும் வணங்க வைப்பது, 'டிவி'யில் பயனுள்ள நிகழ்ச்சிகளை நாமும் பார்த்து அவர்களையும் பார்க்க வைப்பது ஆகியவையும் அவர்களை நல்லவர்களாக வளர்க்கும். முதலில் பெற்றவர்கள் தங்களை செதுக்கிக் கொண்டால் பிள்ளைகள் நன்றாக வளர்வார்கள். செய்ய முடியுமா உங்களால்! * சிவன் கோயிலில் அம்மன் என்றும், பெருமாள் கோயிலில் தாயார் என்றும் அழைக்கக் காரணம் என்ன? எம். கண்ணன், திருப்பூர் இரண்டுமே 'அம்மா' என்ற பொருளைத் தருகிறது. நம்மைப் பெற்றவள் ஒரு தாய். நம்மைப் பாதுகாக்கும் இவள் லோகமாதா. அதாவது, உலகத்துக்கே தாய். இரண்டும் ஒரு பொருள் தருவது தான். இந்துமதம் ஆறாகப் பிரிந்திருந்த காலத்தில், வித்தியாசப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சொற்கள் தான் இவையே அன்றி, வேறு காரணங்கள் இருக்க சாத்தியமில்லை.* கடவுளை ஏன் வணங்க வேண்டும்? வணங்காவிட்டால் தான் என்ன? க. பரிமளா, திருவள்ளூர்மூன்று வேளையும் ஏன் சாப்பிட வேண்டும்? சாப்பிடாவிட்டால் தான் என்ன? என்று கேட்டால் என்ன பதிலோ, அது தான் இதற்கும். கடவுளை வணங்குபவன் பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறான்.* இறைவழிபாட்டில் நேரத்தை வீணாக்காமல் தர்ம சிந்தனையோடு ஒருவன் வாழ்ந்தால் அவனுக்கு இறையருள் கிடைக்காதா? மல்லிகா அன்பழகன், சென்னைநேரத்தை வீணாக்குகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு தர்ம சிந்தனை மட்டும் எதற்கு! தர்ம சிந்தனை என்றால் என்ன? இறைவழிபாடு வேண்டாம் என்பதா! இறைவழிபாடு இருந்தால் தான் உங்கள் சிந்தனை தெளிவு பெறும். பிறகு தான் தர்மம் செய்யும் எண்ணம் வரும். எனவே வழிபாடும் தர்மமும் ஒன்று தான்.* அதர்வண வேத பாடசாலை நம் நாட்டில் எங்குஉள்ளது. அதற்கான புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? சீனிவாசன், விழுப்புரம்காசி, திருப்பதியில் உள்ளன. கோரக்பூர் மற்றும் கிருஷ்ணதாஸ் பதிப்பகங்கள் வேத நூல்களை வெளியிடுகின்றனர்.* ஆடி, மார்கழி மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் ஏன் செய்வதில்லை? சி.கனகராஜ், கூடுவாஞ்சேரிவார நாட்களில் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. இதுபோல நட்சத்திரங்கள் சிலவும் விலக்கத்தக்கன. மாதங்களிலும் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய நான்கு மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் செய்யுமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியன், சந்திரன் போன்ற நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து சான்றோர்கள் இம்முறைகளை வகுத்துள்ளனர். இதன் காரணமாக மேற்படி நான்கு மாதங்களிலும் சுபநிகழ்ச்சிகள் செய்தால் எதிர்காலம் நன்றாக இருப்பதில்லை என்று கணித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது மாசிமாதத்தில் எல்லா சுபகாரியங்களும் செய்கிறார்கள்.* எவர்சில்வர் விளக்கில் தீபம் ஏற்றலாமா? கு.கணேசன், மறைமலைநகர்கூடாது. மண் அகல், வெண்கலம், வெள்ளி, தங்கம் இவற்றினால் ஆன விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். இரும்பு உலோகம் பூஜை சம்பந்தமான விஷயங்களில் கூடாது. எவர்சில்வர் இரும்பிலிருந்து தயாரிக்கப்படுவதால் இவ்விளக்குகள் விலக்கத்தக்கன.