கேளுங்க சொல்கிறோம்!
** அவசர வேலையாக, கோயில் வழிபாட்டை பாதியில் முடித்து கிளம்புவது பாவமா?ஏ. ராஜமாணிக்கம், நீலகிரிகோயிலுக்கு 'செல்போன்' எடுத்துச் செல்வதால் தான் இப்படி நேர்கிறது. மன நிம்மதிக்காக கோயிலுக்குச் செல்கிறோம். இதை ஏன் பாதியில் விடுகிறீர்கள்? கோயிலுக்குக் கிளம்பும்போதே, அவசரம் என்று தெரிந்தால், பயணத்தை நிறுத்த வேண்டும். அல்லது விரைவாக தரிசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். பாதியில் விட்டு வருவதற்கான உபாயங்களை தவிர்த்து விடுங்கள். இது பாவமா என்று கேட்பதை விட, மனநிறைவைத் தருமா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.தேய்பிறை சதுர்த்தியை மட்டும் சங்கடஹர சதுர்த்தி எனக் குறிப்பிடுவது ஏன்?கே. என். சுப்ரமண்யன், சென்னை.வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாள். அன்று, சுபவிஷயங்களுக்காக விநாயகரிடம் வழிபாடு செய்து கொள்ளலாம். தேய்பிறை சதுர்த்தி அன்று நமது வாழ்வில் குறுக்கிடும் தடைகள், இடையூறுகள் அகல வேண்டிக் கொள்ளலாம். அதனால் தான், இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். சங்கட என்றால் துன்பம். ஹர என்றால் போக்குவது என்பது பொருள்.* முகூர்த்தக்கால் நடும்போது மஞ்சள், பால், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது ஏன்?ஆர். சாந்தாராமன், அச்சிறுப்பாக்கம்நாம் செய்யும் சுபநிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறுவது முகூர்த்த பந்தல். இதற்கு நல்ல நேரம் பார்த்து முதல் கால் வைக்கவேண்டும். 'தானு ருத்ரன்' என்னும் பெயரில், இறைவன் அந்த முகூர்த்தக் காலில் இருந்து, நாம் செய்யும் சுப வைபவத்தை இடையூறு இன்றி நடத்தித் தருவதாக ஐதீகம். அதனால், அந்த முகூர்த்த காலுக்கு அபிஷேகம் செய்கிறோம்.* 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது கட்டாயமா?பா. கார்த்திகேயன், விழுப்புரம்சுவாமிக்கு சாத்தப்படும் அஷ்ட பந்தன மருந்துக்கு, அவ்வளவு தான் வலு. பிறகு ஜீரணிக்கத் தொடங்கி விடும். நம் வீட்டை அடிக்கடி புதுப்பித்து வர்ணம் தீட்டுகிறோம். இறைவன் குடியிருக்கும் கோயிலுக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறையாவது கும்பாபிஷேகம் செய்வது புண்ணியமானது. எனவே, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், வர்ணம் தீட்டி புதுப்பித்தல் இவற்றிற்கு 12ஆண்டு ஒரு காலவரையறையே தவிர, செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால், இதைச் செய்தால் நமக்கும், நாட்டுக்கும் சுபிட்சம் உண்டாகும் என்பது உறுதி.பொய் வழக்கில் இருந்து விடுபட எந்தப் பதிகம் படிக்கலாம்? எந்த கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்?அ.மாரீஸ்வரி, விருதுநகர்மதுரையில் ஞானசம்பந்தர் பாடிய திருப்பதி கங்களில், 'காட்டு மாஅது உரித்து' எனத் தொடங்கும் பதிகம், 'செய்யனே திருவாலவாய்' எனத் தொடங்கும் பதிகம், 'வேத வேள்வியை நிந்தனை செய்து' எனத் தொடங்கும் பதிகம் பாராயணம் செய்து வர, பொய் வழக்கில் இருந்து விடுபடலாம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுகால தரிசனம் செய்வது நற்பலன் தரும்.