கேளுங்க சொல்கிறோம்!
* எல்லா தெய்வமும் ஒன்று தானே. பரிகார வழிபாட்டை குறிப்பிட்ட தெய்வத்திற்கு மட்டும் ஏன் செய்கிறோம்?ச. ஷர்மிளா, சோழவந்தான்மருந்து என்றாலே நோய் தீர்க்கக் கூடியது தானே. இருப்பினும், எல்லா நோய்க்கும் ஒரே மருந்தைச் சாப்பிடுவதில்லையே? ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கும் ஆற்றல் இருப்பது போல, ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷ சக்தி இருக்கிறது. தோஷத்திற்கு ஏற்றவாறு தெய்வ வழிபாட்டை பரிகாரமாகச் செய்வது தான் முறை.* சுப விஷயத்தில் வலக்கை, வலக்கால் இரண்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடது கை, காலுக்குக் கொடுப்பதில்லையே ஏன்?ஆர். சாந்தாபாய், ஸ்ரீபெரும்புதூர்இடது கை, கால்களைக் கட்டி விடுவதில்லையே. அவைகளும் இணைந்து செயல்பட்டால் தான் மனிதன் இயங்க முடியும். இயற்கையாகிய உலகமே வலமாகத் தான் சுழல்கிறது. எல்லா மந்திரங்களின் மூலமாகிய பிரணவம் (ஓம்) வலமாகத் தான் சுழிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், வலப்பாகத்தை மங்களத்தின் சின்னமாகச் சாஸ்திரங்கள் கூறியுள்ளன. இடது கையால் செய்ய வேண்டிய வேலைகளை வலக்கையால் செய்ய ஆசைப்பட மாட்டோம் அல்லவா? இதனை இதனால், இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற நியதியை புறக்கணிப்பது, ஆராய்வதும் எல்லாம் வேண்டியதில்லை. அதனால் பலவித குழப்பங்களும், பிரச்னைகளுமே ஏற்படுகின்றன.** தற்காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களின் பெயர் வைத்து விட்டு, வேறொரு மாடர்ன் பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள். இது சரியான முறையா?நா. சித்ரா, புதுச்சேரிஒருவருக்கு எவ்வளவு பெயர்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் இருப்பதால் தானே சகஸ்ர நாம அர்ச்சனை செய்கிறோம். சதீசன் என்னும் சிவன் பெயரை 'சதீஷ்' என்றும், ரமேசன் என்ற விஷ்ணுவின் பெயரை 'ரமேஷ்' என்றும் மாடர்னாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தி மொழிக் கலப்பினால் தான் இப்படி பெயர் வைக்கும் வழக்கம் வந்துள்ளதே தவிர, பெரிய தவறு ஒன்றுமில்லை. ஆனால், 'ஆபத்சகாயம்' என்ற இறைவனின் அற்புதமான பெயரைச் சுருக்கி 'ஆபத்து' என்று கூப்பிடாமல் இருந்தால் சரி தான்.பசுஞ்சாணம் கலந்த நீரில் வாசல் தெளிப்பதன் சிறப்பு என்ன?எம்.சித்ரா, மதுரைபசுஞ்சாணம் தெளித்து மாக்கோலம் இடுவது மங்களகரமான செயல். இது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டால் மகாலட்சுமி தாமாகவே அங்கு வாசம் செய்வாள். நோய்களை உண்டாக்கும் கொடிய கிருமிகளை அழிக்கும் சக்தி கூட சாணத்திற்கு இருக்கிறது.கோயில் போல வீட்டிலும் மணியடித்து பூஜை செய்யலாமா?ஜெ.தீபிகா, திருப்பூர்பூஜை என்பதை கோயிலில் செய்வது போலத் தான் வீட்டிலும் செய்கிறோம். பிறகு மணி மட்டும் என்ன பாவம் செய்தது? தாராளமாக மணியடித்து பூஜை செய்யுங்கள். மணி ஒலிக்கும் இடத்தில் அசுர சக்தி நீங்குவதோடு, தெய்வ சக்தி அதிகரிக்கும்.