உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

* மனபயம் அறவே நீங்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.ஜி.இளங்கோவன், பழநிமுதலில் மனபயம் எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு மனரீதியாகவே அதைப் போக்க முயலுங்கள். நடப்பது எல்லாம் என்னால் தான், நான் தான் காரணம் என்பது போன்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். நடப்பது இறைவன் செயல். காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். சில விஷயங்களில் நம்மால் சாதிக்க முடியாதோ என்ற அச்சமும் வேண்டாம். இறைவன் அருளால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.''மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திறனும் ஆனாய்நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்றுஅஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே''என்று திருநாவுக்கரசர் திருவாவடுதுறையில் பாடிய தேவாரப் பாடலை தினமும் பக்தியுடன் ஓதி வாருங்கள். பயம் நீங்கி துணிவுடன் செயலாற்றும் மனோபலம் விரைவில் உண்டாகும்.* சிலர் கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்கிறார்களே ஏன்?ஜி.குப்புசுவாமி, வடபழநிஒரு பக்தனுக்கு வேண்டுகோள் எதுவும் இருக்காது. எனவே, அதை முன்வைத்து சங்கல்பம் செய்து கொள்ளாமல், சுவாமிக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக, சுவாமி பெயருக்கு செய்யுங்கள் என்று கூறுவது வழக்கத்தில் வந்து விட்டது. இது மனப் பக்குவத்தைப் பொறுத்த விஷயம். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில் மனம் திடமாக இருந்து விட்டால் போதும். நிம்மதியாக வாழலாம். இப்படி பக்குவம் கொண்டவர்களே, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள். விளக்கு, பூஜை பாத்திரங்களை எந்த நாளில் துலக்கலாம்? ஜெயா கோவிந்தன், விழுப்புரம்பாத்திரங்களை பூஜை முடிந்த பின் அன்றாடம் கழுவி வைத்துக் கொள்ளலாம். திருவிளக்கை மட்டும் செவ்வாய், வெள்ளி நீங்கலாக மற்ற நாட்களில் துலக்கிக் கொள்ளலாம்.* சிலர் விதி வலியது என்கிறார்கள். சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். இந்த இரண்டில் எது சரியானது?கே. சவுதா, சென்னைஇரண்டும் சரியே. நமது செயல்பாடுகளைப் பொறுத்து இது அமைகிறது. பாவம் நிறைய செய்திருந்தால் விதி வென்று விடுகிறது. கடமை என்னும் மதி நுட்பம் இருந்தால் அதை வெல்லவும் முடிந்திருக்கிறது. சத்தியவான் கதையில், மாமனார், மாமியார், கணவருக்கு மனம் கோணாமல் தொண்டு செய்த சாவித்திரி விதியை ஜெயித்திருக்கிறாள். இறை நம்பிக்கையுடன் செயல்பட்ட மார்க்கண்டேயனும் விதியை வென்றிருக்கிறார். கடமை, இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு விதியை வெல்லும் சக்தி கிடைத்திருக்கிறது என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மை. கோயில் வழிபாட்டின் போது பிரகாரத்தைக் கட்டாயம் சுற்றி வர வேண்டுமா?பி.இலக்கியா, மதுரைபிரகார வலம் வந்து நமஸ்காரம் செய்தால் தான் கோயில் வழிபாடு நிறைவடையும். கோயிலுள்ள அனைத்து தெய்வங்களையும் தனித்தனியே வலம் வருவது இயலாது. பிரகாரத்தை வலம் வந்து விட்டால் எல்லா சந்நிதியையும் வலம் வந்து வழி பட்ட புண்ணியம் உண்டாகும்.