உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* இந்து மதத்தில் மட்டும் ஏராளமான பண்டிகைகள் இருப்பது ஏன்?எஸ். ஸ்ரவ்யா, மதுரைஎவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் இந்து மதத்தவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இதுவே காரணம். வெளிநாட்டவர் இந்து மதத்தைப் பற்றியும், பண்டிகைகள் பற்றியும் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள் பளிச்சிடுவதற்குக் காரணம் நம் மதமும், பண்டிகைகளும் தான் காரணம் என்ற உண்மையை அவர்களும் தெரிந்து கொண்டு விட்டார்கள். ஒரே மாதிரியாக வாழ்க்கை நடந்து கொண்டிருந்தால் மனமும், உடலும் சோர்வுக்கு ஆளாகி விடும். பண்டிகைகளை குடும்பத்தினரோடு தெய்வீகமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடும் போது புத்துணர்ச்சி கிடைக்கும். மீண்டும் புதிய உத்வேகத்துடன் செயலாற்றும் போது சாதனை புரியத் துவங்கி விடுகிறோம். இந்த உண்மையை உணராமல், வெளிநாட்டினர் கேளிக்கை விடுதிகளில் பொழுது போக்கி மேலும் சோர்வை அடைகிறார்கள். * தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிறார்களே. தம்பிரான் என்பவர் யார்?பி. ஸ்ரீபாதராஜன், கோவை'தம்' என்றால் உயிர்கள். 'பிரான்' என்றால் தலைவர். அதாவது, தம்பிரான் என்ற சொல் உயிர்களின் தலைவரான கடவுளைக் குறிக்கும். பெரிய ஆபத்து வருவது போல் தோன்றி ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, நாம் காப்பாற்றப்பட்டால் அது இறையருளால் நிகழ்ந்ததாக நம்புகிறோம். அதையே தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்கிறார்கள். இவ்வாறு நிகழ வேண்டுமானால், நாம் நிறைய புண்ணியம் செய்ய வேண்டும்.* ஆலய வழிபாட்டின் நோக்கம் கடமைக்கா அல்லது மனநிம்மதிக்கா?ஜி. ஆத்மா சுரேஷ், அடையாறுஇரண்டுக்குமே தான். சிவஞான சித்தியார் என்னும் சைவ சித்தாந்த நூலில் அருணந்தி சிவம் பாடியுள்ள பாடல், 'மானிடப் பிறவி தானும் வகுத்தது மன வாக்காயம், ஆனிடத்தைந்தும் ஆடும் அரன் பணிக்காகவன்றோ' என்று உள்ளது. இந்த மனிதப்பிறவி எடுத்திருப்பதே இறைவனை வழிபடுவதற்கும், அவருக்கு பணி செய்வதற்கும் தான் என்பது இதன் பொருள். இதன் அடிப்படையில் ஆலய வழிபாடு என்பது நமது பிறவிக் கடமையாகிறது. இப்படி வழிபடுபவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கடவுள் தவறாமல் வழங்குவார்.* 'போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கட்டும்' என்கிறார்களே ஏன்?பி.சுமதி, சென்னைஇங்கு கூறப்படும் 'போகிற வழி' என்பது இறந்தபின் உடலை விட்டு உயிர் மட்டும் பிரிந்து செல்லும் வழியைக் குறிக்கும். பாவம் அதிகம் செய்திருந்தால் அந்த உயிர் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும். புண்ணியம் அதிகமிருந்தால் உயிர் எவ்வித கஷ்டமும் இல்லாமல் இறைவனின் திருவடியை சென்றடையும். * மனிதர்களாக வாழ்ந்து மறைந்த கண்ணகி, நல்லதங்காள் போன்றவர்களை வழிபடுவது சரியா?எம்.கிருபானந்தன், புதுச்சேரிமனிதர்களாகப் பிறந்தாலும் அவர்களது வாழ்க்கை தியாகமும் தொண்டும் நிறைந்து தெய்வீகமாக அமைந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவர்களும் அப்படி வாழ்ந்ததால் தான், நாம் அவர்களைத் தெய்வமாக வழிபடுகிறோம்.