உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** காஞ்சிப்பெரியவரை பிரார்த்தித்தால் சிரமம் நீங்கும் என்கிறார்களே?ஆர். அபிதா, கூடுவாஞ்சேரிமகான் காஞ்சிப்பெரியவர், புண்ணியசீலராக ஆன்மிக நிலையிலும், நடமாடும் நூலகமாக அறிவு நிலையிலும், கருணைக் கடலாக மனித வாழ்விலுமாக இருந்தவர். பல கோணங்களிலும் போற்றப்பட்ட அவர், மனித வடிவில் வந்த தெய்வம். அவரைப் பிரார்த்தித்தால் சிரமம் நீங்கி நல்லது நடக்கும். அவர் காட்டிய வழியில் தர்மங்களைச் செய்வது தான் அவரை வழிபடுவதாகும்.* வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதாமே! ஏன்?அ.கிருஷ்ணசாமி, திருப்பூர் தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். * கோயிலின் எல்லா சந்நிதிகளிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா? கூடாதா?எஸ்.சியாம் சுந்தர், கோவைஎல்லா சந்நிதிகளிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது கூடாது. கொடிமரம் அருகிலுள்ள பலிபீடத்துக்கு வெளிப்புறத்தில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும்.* திருஷ்டிப் பூசணிக்காயை போக்குவரத்துக்கு இடையூறாக முச்சந்தியில் உடைக்கிறார்களே. வேறு இடத்தில் உடைப்பதற்கு வழியில்லையா?எஸ்.சடையப்பன், காளனம்பட்டிதிருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பது மகாபாவம். சாலை ஓரமாக உடைத்து, உடனே சுத்தப்படுத்தி விட வேண்டும்.இறைவன், 'பால் நினைந்து ஊட்டு'பவராக இருக்கும் போது அவரிடம் வேண்டுதல் வைப்பது தேவையா?தேன்தமிழன், நெய்வேலிஇறைவன் கருணையாளராக இருக்கும் போது வேண்டுதல் வைப்பது தவறு தான். இதையே மாணிக்கவாசகர், 'வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ' என்று குறிப்பிடுகிறார். இதை உணர்ந்தவர்கள் வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டார்கள். குழந்தை அழுவதற்கு முன் பாலூட்டும் தாயின் கருணையை, 'பால் நினைந்து ஊட்டும் தாயினும்' என தாயையே இறைவனுக்கு உதாரணப்படுத்துகின்ற அளவுக்கு அவர் பெருமைப்படுகிறார். ஆனால், குழந்தைகள் இது புரியாமல் அழுகின்றன. அழத்தேவையில்லை. நாம் கேட்காமலேயே இறைவன் தருவான் என்ற உணர்வு வரும் வரை, வேண்டுதல் என்பது இருக்கும். இறையருளால் மனம் பக்குவப்படும் போது மாணிக்கவாசகரின் திருவாசகம் சாத்தியமாகி விடும்.* தலை திவசம் எனப்படும் முதல் நினைவு நாளில், கணபதி ஹோமம் நடத்துவது சரிதானா?என். தாமோதரன், கவுண்டன்பாளையம்அந்த நாளில் கணபதி ஹோமம் செய்யக்கூடாது. மறுநாள், கணபதி ஹோமத்துடன் நவக்கிரக ஹோமமும் சேர்த்து செய்ய வேண்டும். இதற்கு 'கிரக யக்ஞம்' என்று பெயர். இதுவே பின்னாளில் 'கிரேக்கியம்' என மருவி விட்டது.