கேளுங்க சொல்கிறோம்!
* ஏழேழு பிறவிக்கும் தம்பதியாக சேர்ந்து வாழ செய்ய வேண்டிய வழிபாடு இருந்தால் சொல்லுங்கள். சி. குமார், பொன்னேரி ''மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்ற தேவாரப் பாடலை தினமும் படியுங்கள். இறையருளால், ஏழேழு பிறவிக்கும் நல்ல தம்பதிகளாக வாழ்வீர்கள். ** பணியில் உண்டாகும் சிரமம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்? எஸ்.முரளி, குறிஞ்சிப்பாடி நாம் செய்ய வேண்டிய கடமைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டால் எந்த சிரமமும் குறுக்கிடாது. இதையும் தாண்டி பணிச்சுமை, எதிரி தொல்லை போன்றவை குறுக்கிட்டால் ஞாயிறு அன்று மாலை ராகு காலத்தில் (4.30- 6.00 மணி) துர்க்கை அல்லது பைவரரை வழிபடுங்கள். சிரமம் நீங்கும். * பூஜை சாமான்களை வெள்ளிப்பொருட்களாகப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? சு.பாலசுப்பிரமணியன், ராமேஸ்வரம் நமக்கு வளமான வாழ்வு அருளும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதே பூஜையின் நோக்கம். அதனால், எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் பூஜை செய்ய முடியுமோ, அந்த நிலையில் வழிபாட்டை மேற்கொள்கிறோம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது என்ற அடிப்படையில், மண், பாத்திரம், செம்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். * வீட்டில் பூஜையை வசதிப்பட்ட போது செய்யலாமா? அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டுமா? பிருந்தா சுந்தரம், வடபழநி காலை எட்டு மணிக்குள் பூஜை முடிப்பது உத்தமம். இதுவே முதல் தரமானது. ஒன்பது மணிக்குள் முடிப்பது மத்திமம். அதாவது இரண்டாம் நிலை. பத்து மணிக்குள் முடிப்பது அதமம். இது மூன்றாம் நிலை. மாலை நேரத்தில் பூஜை செய்பவர்கள் 6.00-7.30 மணிக்குள் செய்து விடுங்கள். * ராமேஸ்வரம் செல்பவர்கள் தேவிபட்டினம் கடலிலும் நீராட வேண்டுமா? அ.கிருஷ்ணசாமி, அங்கேரிபாளையம் ராமேஸ்வரம் யாத்திரையில் அக்னி தீர்த்தத்திலும், கோவிலிலுள்ள தீர்த்தங்களிலும் நீராடுவது முக்கியம். தேவிபட்டினத்தில் நவக்கிரக கற்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கு நீராடுவோருக்கு கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். ஆனால், அங்கு நீராட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. * கருப்புக் கயிறு கட்டிக் கொள்வதால் உண்டாகும் நன்மை என்ன? மகா, திருப்பூர் கருப்புக் கயிறு கட்டினால் கண்ணேறு என்னும் திருஷ்டி தோஷம் நீங்கும். இதுவே மந்திரிக்கப்பட்டதாக இருந்தால் தெய்வத்தின் பலமும் உடனிருந்து காப்பாற்றும்.