உள்ளூர் செய்திகள்

தாயே நீயே துணை

மாமதுரை அங்கயற்கண் நாயகியே! அம்மையே - துாங்க ஒளியே! பெருந்திருவே! ஒதிமமே! உண்மை வெளியே! பரப்பிரம வித்தே! அளிசேரும் கொந்தளக பந்திக்குயிலே! சிவயோகத் தைந்தருவே! மூவருக்கும் அன்னையே! - எந்தமிடர் அல்லல் வினையெல்லாம் அகற்றியே அஞ்சலென்று நல்ல சவுபாக்கியத்தை நல்கியே - வல்லபத்தி ஆசுமதுரஞ்சித்ர வித்தாரம் என்றறிஞர்பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு - நேசமுடன்தந்தென்னை ஆட்கொண்டு சற்குருவாய் என்னகத்தில் வந்திருந்து புத்திமதி கொடுத்துச் - சந்ததமும் நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண் தாயே சரணம் சரண். மதுரை மீனாட்சியம்பிகையின் திருவருளை பெற்றவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள். இவரால் பாடப்பெற்ற நுால்களுள் ஒன்று மீனாட்சியம்பிகை கலிவெண்பா. அதிலுள்ள ஒரு பகுதிதான் இத்துதிப்பாடல். இவ்வுலகம் இயங்க காரண கர்த்தாவாக விளங்குபவள் பராசக்தி. அவள் மதுரையில் மீனாட்சியாக அருள் செய்கிறாள். உலக உயிர்களுக்கு நல்வாழ்வு தந்தருளும் உன்னை முழுவதுமாக சரணடைகிறேன் என்கிறார் சுவாமிகள். இத்துதியை மீண்டும் மீண்டும் படிப்பவர்களுக்கு இதன் பொருள் வெளிப்படையாக விளங்கும். எந்த அம்மன் கோயிலாக இருந்தாலும் அங்கு சென்று மனம், மொழி, மெய்களால் ஒன்றி அர்ப்பணிப்போடு ஒருவர் படிக்கின்றார்களோ அவர்களுக்கு நினைத்தது நடக்கும். வேண்டியது கிடைக்கும்.