உள்ளூர் செய்திகள்

சூரிய ஸ்தோத்திரம்

தினமும் காலையில் நீராடியதும், கண்கண்ட தெய்வமான சூரியனை வணங்கும் விதத்தில், சூரிய ஸ்தோத்திம் தரப்பட்டுள்ளது. * குலதெய்வமான சூரியனே! நீ இந்த உலக மக்களின் மனங்களை மலரச் செய்கிறாய். இந்திராதி தேவர்கள் அனைவரும் உன் அருளையே நாடிச் செல்கிறார்கள். அனைவரும் போற்றும் பொன் போன்ற ஒளிக் கிரணங்களைப் பெற்றவனே! சர்வலோக ஈஸ்வரனே! உனது திருவடிகள் எங்களுக்கு நற்கதியைத் தந்தருளட்டும்.* எல்லா மக்களாலும் வணங்கப்படுபவனே! பிரகாசம் மிக்க ஒளிக்கதிர்களால் உலகம் முழுவதையும் வாழச் செய்பவனே! பெருஞ்செல்வத்தின் அதிபதியாக விளங்குபவனே! மார்த்தாண்டனே! ஆதித்தியனே! மூலமுதற்பொருளாகத் திகழ்பவனே! சூரிய மூர்த்தியே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்.* ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகத் திகழ்பவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்தியாக இருந்து முத்தொழில்களையும் புரிபவனே! ஸ்கந்தனாக இருப்பவனே! பிரஜாபதியாகவும், தேவர்களின் தலைவனான இந்திரனாகவும், செல்வ வளம் தரும் குபேரனாகவும், வருணனாகவும், காலனாகவும் இருப்பவனே! உன் அருளால் எங்களை வாழ்விப்பாயாக.* பச்சை வண்ணமுடைய மரகதம் போல பிரகாசிக்கும் ஏழு குதிரைகளில் சிவந்த மேனியனாக வான மண்டலத்தில் பவனிவரும் சூரியபகவானே! உலக உயிர்களை உய்விக்க ஆயிரம் கிரணங்களைக் கொண்டு வலம் வருபவனே! உன் பாத கமலங்களைச் சரணடைந்து போற்றுகிறோம்.