உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் ஆத்திசூடி - 20

நல்லதையே நினைஇந்த தேசம் தந்த வேதம், இதிகாசம், புலவர்களான திருவள்ளுவர், இளங்கோ, கம்பன், காளிதாசன் என பாரதிக்கு எல்லாமே பெருமை. அவன் எண்ணம் பற்றி, எண்ணிய முடிதல் வேண்டும் நல்லதே எண்ணல் வேண்டும்திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் எனக் கூறும் போது நல்லதையே எண்ண வேண்டும் என்கிறார் பாரதியார். இதனால் திண்ணிய நெஞ்சமும், தெளிந்த அறிவும் தானாக வந்து விடும். கெடுவான் கேடு நினைப்பான் என்பது பழமொழி. நல்லதை நினைக்க, நம் மனதிலும் நம்மைச் சுற்றிலும் நேர்மறை எண்ணம் நிரம்பும். எல்லோருமே Human Being தான். ஆனால், Being Human ஆக (மனிதத் தன்மையுடன்) இருப்பதுதான் முக்கியம். ஆதிசங்கரர் வாழ்வில் கூட இந்த அனுபவம் உண்டு. ஒரு தடவை அவரின் சீடர்களில் மூவர் குருவிடம், பாடம் கற்க தயார் என்று கூற, ஆதிசங்கரர், நான்காவது சீடரான கிரியும் வரட்டும் என பதிலளித்தார். அவர்கள் மூவரும் தங்களின் உடைகளைத் துவைப்பவனான கிரிக்கும், பாடத்திற்கும் என்ன சம்பந்தம் எனக் கேலி செய்தனர். குருவான ஆதிசங்கரர், அக்கரையில் இருந்து வந்து கொண்டிருந்த கிரியிடம் வா எனக்கூற, அவனும் வரும் வழியில் குருவின் மகிமையைப் பாடியபடி வந்தான். அந்த ஸ்தோத்திரத்தின் நடையை அறிந்த சீடர்கள் அதிர்ந்தனர். அந்த ஸ்தோத்திரம் தான் தோடகாஷ்டகம். அதன் பின் அவர் தோடகாச்சார்யார் எனப்பட்டார். சக மனிதர் பற்றி நல்லதையே சிந்திக்க வேண்டும். அவர்களிடம் நல்லதைப் பேச வேண்டும் என்பதே இங்கு நாம் அறிய வேண்டியது. நல்ல எண்ணமும், நல்ல செயலும் நாட்டையே வாழ வைக்கும் என்கிறார் பாரதியார். நல்லதையே ராமன் நினைத்தான் என்பதை உணர்ந்ததால்தான் அவரை வாலி வணங்கினான். அதே போல இன்று போய் நாளை வா எனச் சொன்ன ராமனின் பண்பை உணர்ந்து ராவணன் வணங்குகிறான். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். இதுவே இதிகாசங்கள் கூறும் கருத்து. நல்லது என நினைத்து செய்த எந்த செயலும் நம் மனதை கொல்லாது. நம்மை சிதறடிக்காது.அதே போல் மனம், எதிர்மறைப் பொருட்கள், விஷயங்களை எளிதில் பதிவு செய்து கொள்ளும். - எதிர்மறை எண்ணம், செய்திகளை பதிவு செய்யும் அளவிற்கு நேர்மறை எண்ணத்தை மனம் பதிவு செய்யாது. இது மனதின் இயல்பு. ஒருவரின் நல்ல செயல்களை, செய்த உதவிகளை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். அவன் என்றோ செய்யாததை, அவனால் செய்ய முடியாததை மனதில் வைத்துக் கொள்கிறோம். அதையே பேசிக் கொண்டிருக்கிறோம். நல்லெண்ணம் கொண்டவர்களை நடுக்காட்டில் விட்டாலும் நன்றாக வாழ்வர்.அவர்களிடம் எதிர்பார்ப்பு இருக்காது. தனக்கு கெட்டது நடந்தால் அவர்களால் அடுத்தவரைக் கைகாட்ட முடியாது. அடுத்தவர் இடத்தில் இருந்து தான் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர்கள் பார்ப்பார்கள். சுயநலம் இல்லாத அந்த மனிதனுக்கு தீமை கூட நல்லதாகத் தான் அமையும்.நல்லதையே நினைக்க வேண்டும் என்பதற்கு பாரதியாரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி உணர்த்துகிறது. சோணாசலம் பிள்ளையின் மகன் காந்திமதிநாத பிள்ளை. பாரதியாரை விட வயதில் மூத்தவர். சிறந்த தமிழ்ப்புலவர். தன்னை விட பாரதியை எல்லோரும் போற்றுகிறார்களே என பொறாமை உணர்வு பொங்கியது. எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என நினைத்தார். அதற்கு ஒருநாள் சந்தர்ப்பம் வாய்த்தது. சோணாசலம் பிள்ளை வீட்டில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் ஈற்றடி கொடுத்து பாடல் இயற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியைப் பார்த்து காந்திமதிநாத பிள்ளை, 'பாரதி சின்னப் பயல்' என ஈற்றடி கொடுத்து வெண்பா இயற்றச் சொன்னார். காந்திமதிநாதன் நமட்டு சிரிப்புடன் சாதித்து விட்டதாக எண்ணினார். சின்னப்பையனை இப்படி மடக்குகிறானே என சில நல்லவர்கள் வேதனைப்பட்டனர். வெண்பா தயார்” என்ற பாரதி,ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்றகாரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்பாரதி சின்னப் பயல்“காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்” என பிரித்துக் கூறினான். காந்திமதி நாதனின் தந்தை சோணாசலம் பிள்ளை தன் மகனை மட்டந்தட்டிப் பாடிய பாடல் என்பதையும் மறந்து பாரதியைப் பாராட்டினார். காந்திமதிநாதனின் தலை தாழ்ந்தது.காந்திமதி நாதன் பொறாமை கொண்டவனாக இருந்தாலும் நல்ல தமிழ்ப்புலவர் என்பதைப் பாரதி அறிந்திருந்ததால் அவனை மகிழ்விக்க விரும்பினார். வெண்பாவைச் சற்று மாற்றி, ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்ஈண்டின்றென் றன்னை நீ ஏந்தினையால் - மாண்புற்றகாரதுபோல் உள்ளத்தான் கந்திமதி நாதற்குப்பாரதி சின்னப் பயல்என பாடினான்.இறுக்கம் மாறி மகிழ்ச்சியான சூழல் உருவானது. எல்லோரும் பாரதியின் சாமர்த்தியத்தை பாராட்டினர். காந்திமதிநாதன் பொறைமையைக் கைவிட்டுத் தன்னை வியந்து பாடிய பாரதியை கட்டிக் கொண்டார். அதன் பிறகு இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இரண்டு நிகழ்வுகளிலும் பாரதி நல்லதையே நினைத்து இருக்கிறான் என்பதை அறியலாம்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்தினை விதைத்தவன் தினை அறுப்பான்ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் பெரியோரின் அனுபவ மொழி இது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப் பதிலாக விஷப்பயிர் விளையாது. அதே போல நல்லது செய்தால் நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.விதைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்த அன்றே பலன் தருவதில்லை. நல்லது நினைத்தால் வரும் நாட்களில் நன்மை உண்டாகும். விவசாயி ஒருவரின் வீட்டில் பூசணிக்காய் காய்த்துத் தொங்கியது. அதைப் பார்த்த பணக்காரர் ஒருவர் பூசணிக்காயை பறித்து சமைத்து சாப்பிட்டார். இது எப்படியோ ஊராருக்கு தெரிய வந்தது. அதற்கு பின் அந்த வீட்டின் அடையாளமே பூசணிக்காய் திருடியவர் வீடு என்றாகி விட்டது. ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெரியவர் இறந்து மூன்று தலைமுறை கடந்தும், அந்த வீட்டின் அடையாளம் மட்டும் பூசணிக்காய் திருடியவர் வீடு என்றே நிலைத்தது. நான்காவது தலைமுறை இதைக் கேட்டு மனம் வருந்தி, ஊருக்கு வந்த ஒரு சாமியாரிடம் பரிகாரம் கேட்க, அவர் அன்னதானம் செய்யுங்கள் என்றார். மறுநாள் முதல் ஏழைகளுக்கு உணவு அளித்தனர். பூசணிக்காய் திருடியவர் வீடு என்ற பெயர் பத்தே நாளில் அன்னதானம் செய்யும் வீடு என மாறியது. இதில் வந்ததுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்ற பழமொழி. இதிலுள்ள நீதி என்றால், தீமையை தீமையால் அழிக்க முடியாது. நன்மை செய்தே மாற்ற முடியும். நம்மை நாமே சிறப்பாக உணரும் பட்சத்தில் நம் செயல், சிந்தனை எப்போதும் சிறப்பாக இருக்கும். குற்றம் இல்லாமல் சுவாசிக்கும் போது எத்தனை நிம்மதி நமக்கு. ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்குத் தேதி, ஆயிரம் இருக்குது சுபதினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் என்ற வரிகளின்படி, வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறை சிந்தனையுடன் நன்று கருது -அதாவது நல்லதையே நினை என்கிறது மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி. ---ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010