பாரதியாரின் ஆத்திசூடி - 33
சூரரைப் போற்றுநம் தேச வரலாற்றில் விடுதலை போராட்ட காலத்தில் எத்தனையோ வீரர்கள், சூரர்கள் இருந்தனர் - இன்னும் இருக்கிறார்கள்? தேச வரலாற்றில், சமுதாயப் பங்களிப்பில் அரிய செயல், சாதனைகளைச் செய்தவர்களை இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தாம் பெற்ற அறிவால், அது தந்த ஞானத்தால், தன்னையும் உணர்ந்து, சமுதாயத்திற்கும் நன்மையைக் கொடுப்பவரே சூரர். மேடையில் கை தட்டலுக்காக மட்டும் பேசுபவர்களும், திரையில் மட்டும் வீரர்களாகவும் நாயகனாகவும் வருபவர்கள் சூரர்கள் அல்லர். நிஜமான வீரர்களும் அல்லர். இவர்களை வாய்ச் சொல்லில் வீரர்கள் என்கிறார் பாரதியார். இங்கே பிரச்னை என்னவென்றால் யார் வீரர், யார் சூரர் என்பதை சரியாகக் கண்டறியும் உண்மைப் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பதை ஆங்கிலத்தில் Reason என்பார்கள். அதாவது தெளிவாகப் பகுத்து அறியும் திறன் கொண்டதே பகுத்தறிவு. பகுத்தறிவு என்றாலே நாத்திகம் பேசுவது என்ற மாயை உருவான பிறகு எப்படி உண்மையாகப் பகுத்து அறிவது?மகாகவி பாரதியார், ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் எனக் கூறி வணங்கும் போது, சொல்லுக்கடங்காவே பராசக்திசூரத்தனங்கள் எல்லாம்வல்லமை தந்திடுவாள்-பராசக்தி வாழியென்றே துதிப்போம் என பராசக்தியின் சூரத்தனங்களை போற்றிப் பாடுகிறார். நம் கதைகள், இதிகாசம், புராணங்களில் சூரர்களைப் பற்றியும்,அவர்களுடைய அரிய செயல்களைப் பற்றி கூறப்பட்டுள்ளன. அவர்கள் எல்லாம் நம் நாட்டின் நடமாடும் பாத்திரங்களே. எத்தனை விதமான இலக்கியங்கள்? எவ்வளவு பாத்திரங்கள்? கண்ணன் ஆயர்பாடியில் செய்த யாவையும் சூரத்தனங்களே. அனுமன் எப்படிப்பட்ட வீரசூரனாக வணங்கப்படுகிறான்?மகாபாரதத்தில் கர்ணன், அபிமன்யூ, தர்மன், அர்ஜூனன் போன்றோர் சூரர்கள். ராமாயணத்தில் இந்திரஜித், அதிகாயனும் தங்கள் சூரத்தனத்தை, வீரத்தை, அவர்கள் தந்தைக்காகவும், குலப்பெருமை காக்கவும் காட்டுகிறார்கள். அதனால்தான் இன்றும் ஒருவரின் பராக்கிரமத்தைப் புகழும் போது 'அதிகாய சூரன்' என குறிப்பிடுகிறோம். பிரபல பிரெஞ்சு கவிஞரும் எழுத்தாளருமான விக்டர் ஹுயூகோ நாடு கடத்தப்பட்ட போது தான், சிறந்த படைப்புகளை தந்தார். அதே போல பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு இந்தியாவிற்கு பாரதியார் துரத்தப்பட்ட நேரத்தில் தான், (புதுச்சேரியில்) தலைசிறந்த குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவை வெளிவந்தன. எளிய மொழியில் கவிதை, புதிய நடையில் உரைநடை, புதிய வடிவில் வசன கவிதை இப்படி தந்து ஆங்கில அரசை எதிர்த்த பாரதி போற்றத்தக்க சூரன்தானே? வீரம், தீரம், துணிவு, சூரத்தனம் இவற்றுடன் கனிவுடன் செய்யும் மக்கள் சேவையே சிறந்த மனிதர்களின் அரிய குணங்கள். சமஸ்கிருதத்தில் நீதிநுால் எனப்படும் சுபாஷிதம் இதை,பரோபகாரார்த்தம் பலந்தி வ்ருக்ஷா:பரோபகாரார்த்தம் வஹந்தி நத்யா:பரோபகாரார்த்தம் துகந்தி காவ:பரோபகாரார்த்தம் இதம் சரீரம்பழம் தரும் மரங்கள் பழத்தை சுவைப்பதில்லை. கோடையின் கடுமையிலும் நதிகள் தண்ணீரை பருகுவதில்லை. பால் தரும் பசுக்களும் தன் பாலை தானே அருந்துவதில்லை. கடவுளின் படைப்பில் அனைத்து ஜீவராசிகளும் சுயநலம் இல்லாமல் மனம் உவந்து தருகின்றன. அப்படி தருவதை பெருமை பேசுவதுமில்லை; மனிதன் மட்டுமே எதையுமே மற்றவர்களுக்கு தராமல், முடிந்தால் பிறரை ஏமாற்றியும் தனக்கென பதுக்கி வைக்கிறான். உயிர் பிரியும் போது இவன் கூட கொண்டு போவது பரோபகாரம், தர்மம் மட்டுமே. வாங்கிய சொத்துக்களோ, பணமோ, நகையோ அல்ல. வெளிநாடுகளுக்கு போகும் போது அந்த நாட்டின் பணத்தை செலவுக்காக மாற்றி கொண்டு போவது போல், பணத்தை தர்மமாக மாற்றி கொண்டால் பிறவி முடிந்து போகும் போது உதவியாக இருக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.பாரதியார் இதையே, உற்றவர் நாட்டவர் ஊரார் -- இவர்க்குஉண்மைகள் கூறி இனியன செய்தல்நற்றவம் ஆவது கண்டோம் -- இதில்நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.பக்கத் திருப்பவர் துன்பம் -- தன்னைப்பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்திஎன பாடுகிறார். கவிஞர் வாலியின் பாடல் வரிகள், பாரதியாரின் அடியொற்றியே வருகிறது. தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமேஅந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமேபொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லைஇதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லைஅசகாய சூரன் (அ + சகாய + சூரன்) என்றால் 'பிறர் துணையின்றி பகைவரை வெல்லும் வீரன்' எனப் பொருள்.சூரர் என்பது 'சூரியனைப் போல கூரிய ஒளியுடையவர்' என்பதைக் குறிக்கும். அது, வீரம், அறிவுக்கூர்மை, செயல்திறன், எண்ணம், பண்பு என எல்லாவற்றிலும் சூரியஒளிக்கு நிகரான கூர்மை.வீரம் என்றால் அஞ்சாத மனஉறுதி கொண்டவர். சூரர் என்றால் சிறப்பாக செயல்படுபவர். அசகாய சூரன் என்றால் எவராலும் செய்ய முடியாததை வியக்கத்தக்க வகையில் செய்து முடிக்க கூடியவர். அதனால் அப்படிப்பட்ட அபூர்வமானவர்களை போற்ற வேண்டும் என்கிறார் பாரதியார். ஆதிசங்கரர், ராமானுஜர், பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர் போன்ற ஆன்மிகப் பெரியார்கள், ராணுவ வீரர்கள்,- அறிவியல் சாதனையாளர், - கலைஞர்கள், - இலக்கியவாதிகள், - ஆசிரியர், - நேர்மையான மன்னர்கள், கோயில்கள் கட்டியவர்கள் என அத்தனை பேரும் நிஜமான சூரர்களே.விடுதலைப் போராட்டக் காலத்தில் வீரர்கள், தீரர்கள், சூரர்கள், நெஞ்சில் துணிவு கொண்ட பலரை நாம் கண்டிருக்கிறோம். அவர்களை பாராட்ட வேண்டியது நம் கடமை.வ.உ.சி., பேசும்போது, ''பாயக் காண்பது சுதந்திர வெள்ளம்; பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்'' என்கிறார். சொல்லுக்கு அடங்காத சூரத்தனமான பேச்சு இது. இப்படியே வடக்கே பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய், தெற்கே பாரதியார், சிவா, வ.உ.சி., வ.வே.சு.அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி, ஆர்யா என்ற பாஷ்யம் அய்யங்கார் எனப் பலர் இருந்தனர். அதற்கு முன் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், கட்டபொம்மன் போன்றவர்கள் நிஜமான சூரர்களாக விடுதலைக்கு வித்திட்டனர். இன்றும் நாட்டுக்காக உழைத்து வரும் தலைவர்கள், நல்ல இசையை, இலக்கியத்தை, ஆன்மிகத்தை, கலாசாரத்தை, பண்பாட்டைக் காப்பதுடன், தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒவ்வொருவரும் சூரர்கள் தான். அதேபோல, தேசத்திற்குப் பெருமை சேர்க்கும்படி பல்வேறு துறைகளில் வெற்றிக் கொடி நாட்டி வருபவர்கள், நேர்மையான அரசியல்வாதிகள், நாட்டில் நடக்கும் அநீதிகளை, மக்கள் விரோத செயல்களைத் துணிவாக எடுத்துச் சொல்லும் பத்திரிகைகள், அதன் ஆசிரியர்கள் என இவர்கள் யாவரும் போற்றுதலுக்குரிய சூரர்களே. ஊழலை, லஞ்சத்தை வெறுத்து, இலவசங்களை மறுத்து, உழைப்பில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் சூரர்தான். இயற்கையில் பிறந்தவை யாவும் மரணம் அடையும். ஆனால் மரணத்தை வென்ற பலர் இன்றும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். தொடர்ந்து வாழ்வார்கள். அப்படி இருப்பவர்கள்தான் சூரர்கள். அதையே,இன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்குஇளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்,துன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்குதோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்மூன்றில் எதுவரு மேனும் - களிமூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.என்றே பாடுகிறார். மேலும், வையகம் காப்பவரேனும் - சிறுவாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்பொய்யகலத் தொழில் செய்தே - பிறர்போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.ஒக்கத் திருந்தி உலகோர்- நலம்உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.ஊருக் குழைத்திடல் யோகம்; நலம்ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்போருக்கு நின்றிடும் போதும் - உளம்பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்இன்றைக்கும் சமுதாயத்தின் நன்மை கருதி தன்னலம் இன்றி சேவை செய்பவரே சூரர்; அவர்களைப் போற்ற வேண்டும் என்கிறது பாரதியாரின் ஆத்திசூடி.-ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010